ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9,750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

PM dedicates to the nation and lays the foundation stone of multiple development projects at Rewari, in Haryana on February 16, 2024.

ஹரியானா மாநிலம் ரேவாரியில் இன்று ரூ.9750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். நகர்ப்புறப் போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலா தொடர்பான பல முக்கியத் துறைகளை இந்தத் திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நிகழ்ச்சியையொட்டி கண்காட்சிகளையும் திரு மோடி பார்வையிட்டார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ரேவாரியின் துணிச்சலான மண்ணுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர் மீது பிராந்திய மக்கள் கொண்டுள்ள அன்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். 2013-ம் ஆண்டில் ரேவாரியில் பிரதமர் வேட்பாளராக தனது முதல் நிகழ்ச்சி தொடங்கியதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். மக்களின் ஆசீர்வாதம் தனக்கு மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் கூறினார். மக்களின் ஆசீர்வாதங்களால் இந்தியா உலகில் புதிய உயரங்களை அடைந்துள்ளது என்று அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்குத் தாம் மேற்கொண்ட பயணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதை மற்றும் நல்லெண்ணத்திற்கு இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், ஜி20, சந்திரயான், இந்தியப் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்தது ஆகியவை பொதுமக்களின் ஆதரவால் பெற்ற பெரும் வெற்றிகள் என்று அவர் கூறினார். வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்ற மக்களின் ஆசீர்வாதங்களை அவர் கோரினார்.

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற, ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சி அவசியமாகும் என்று பிரதமர் கூறினார். ஹரியானாவின் வளர்ச்சிக்காக சாலைப் போக்குவரத்து, ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.10,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததாகவும், அடிக்கல் நாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர், ரேவாரி, குருகிராம் மெட்ரோ, பல்வேறு ரயில் பாதைகள், புதிய ரயில்கள், அனுபவ அருங்காட்சியகமான அனுபவ கேந்திரா ஜோதிசார் பற்றியும் குறிப்பிட்டார். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கற்பித்த பாடங்களை உலகிற்கு இது அறிமுகப்படுத்தும் என்றும், இந்தியக் கலாச்சாரத்தில் ஹரியானா மாநிலத்தின் பங்களிப்பை எடுத்துரைக்கும் என்றும் பிரதமர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஹரியானா மக்களை அவர் பாராட்டினார்.

‘மோடியின் உத்தரவாதம்’ காரணமாக தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ரேவாரி ‘மோடியின் உத்தரவாதத்தின்’ முதல் சாட்சி என்று கூறினார். நாட்டின் கௌரவம் மற்றும் அயோத்திதாமில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் குறித்து தாம் இங்கு அளித்த உத்தரவாதங்களை அவர் நினைவுகூர்ந்தார். இதேபோல், “பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தின்படி 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இன்று ஜம்மு-காஷ்மீரில் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் தங்கள் உரிமைகளைப் பெறுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

ரேவாரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்’ என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், இதுவரை ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் பலன்களை ஹரியானாவைச் சேர்ந்த பல முன்னாள் ராணுவ வீரர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ரேவாரியில், ஒரு பதவி திட்டப் பயனாளிகள் இதுவரை ரூ.600 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். முந்தைய அரசு ஒரு பதவிக்கு ரூ.500 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியதாகவும் இது ரேவாரியில் படைவீரர்களின் குடும்பங்கள் பெற்ற தொகையை விட குறைவு என்றும் அவர் கூறினார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் ரேவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனையையும் தாம் திறந்து வைப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இது உள்ளூர் குடிமக்களுக்கு சிறந்த சிகிச்சையையும் மருத்துவராக மாறுவதற்கான வாய்ப்பையும் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். ரேவாரி எய்ம்ஸ் 22-வது எய்ம்ஸ் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஹரியானாவிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியையாவது உறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய மற்றும் கடந்தகால அரசுகளின் நல்ல மற்றும் மோசமான நிர்வாகத்தை ஒப்பிட்ட பிரதமர், கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் இரட்டை என்ஜின் அரசு இருப்பதை எடுத்துரைத்தார். ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளுக்கு இணங்குவதில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். விவசாயத் துறையில் ஹரியானாவின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் தொழில்கள் விரிவாக்கம் குறித்து அவர் பேசினார். சாலை, ரயில் அல்லது மெட்ரோ சேவைகளாக இருந்தாலும் தெற்கு ஹரியானாவின் விரைவான வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார். தில்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையின் தில்லி-தவுசா-லால்சோட் பிரிவின் முதல் கட்டம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார், அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலையான தில்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை ஹரியானாவின் குருகிராம், பல்வால் மற்றும் நுஹ் மாவட்டங்கள் வழியாக செல்கிறது என்றும் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு சராசரியாக ரூ.300 கோடியாக இருந்த ஹரியானாவின் ஆண்டு ரயில்வே பட்ஜெட், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரோத்தக் – மெஹம் – ஹன்சி மற்றும் ஜிந்த் – சோனிபட் புதிய ரயில் பாதைகள், அம்பாலா கண்டோன்மென்ட்-தப்பர் போன்ற இரட்டை வழித்தடங்கள் பற்றியும் குறிப்பிட்ட அவர், லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் அதே வேளையில், வாழ்க்கையை எளிதாக்குவதையும், தொழில் செய்வதையும் இது எளிதாக்கும் என்றார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பிடமாக தற்போது விளங்கும் மாநிலத்தில் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாநில அரசின் பணிகளையும் பிரதமர் பாராட்டினார்.

இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமான கம்பளங்களை ஏற்றுமதி செய்வதுடன் 20 சதவீத ஆடைகளை உற்பத்தி செய்யும் ஹரியானா, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் தனக்கென ஒரு பெரிய பெயரை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். ஹரியானாவின் ஜவுளித் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் சிறு தொழில்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பானிபட் கைத்தறிப் பொருட்களுக்கும், ஃபரிதாபாத் ஜவுளி உற்பத்திக்கும், குருகிராம் ஆயத்த ஆடைகளுக்கும், சோனிபட் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கும், பிவானி நெய்யப்படாத ஜவுளிகளுக்கும் புகழ் பெற்றவை என்றார். கடந்த 10 ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக பழைய சிறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் வலுப்பெற்றுள்ளதாகவும், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய தொழில்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ரேவாரியில் உள்ள விஸ்வகர்மாவின் பித்தளை வேலைப்பாடு மற்றும் கைவினைப் பொருட்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 18 தொழில்களைச் சேர்ந்த பாரம்பரியக் கைவினைஞர்களுக்காக பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டதை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயனாளிகள் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் ஒரு பகுதியாக மாறி வருவதாகவும், நமது பாரம்பரியக் கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை மாற்ற அரசு ரூ.13,000 கோடியை செலவிடவிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறு விவசாயிகளுக்குப் பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதி, ஏழைகள், தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பிணையில்லா கடன்கள் வழங்க முத்ரா திட்டம், சாலையோர வியாபாரிகளுக்குப் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

மாநிலத்தில் உள்ள பெண்களின் நலன் குறித்துப் பேசிய பிரதமர், இலவச எரிவாயு இணைப்புகள், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் உள்ள 10 கோடி பெண்களை, ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட சுய உதவிக் குழுக்களுடன் இணைப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இந்த சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி உதவியையும் அவர் எடுத்துரைத்தார். . லட்சாதிபதி சகோதரிகள் திட்டங்கள் பற்றிப் பேசிய பிரதமர், இதுவரை 1 கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அவர்களின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நமோ ட்ரோன் சகோதரி திட்டம் பற்றியும் பிரதமர் பேசினார். இத்திட்டத்தை மகளிர் குழுக்கள் விவசாயத்தில் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

“ஹரியானா வியக்கத்தக்க வாய்ப்புகளின் மாநிலம்” என்று கூறிய பிரதமர், ஹரியானாவில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தெரிவித்தார். ஹரியானாவை வளர்ந்த மாநிலமாக மாற்றவும், தொழில்நுட்பம், ஜவுளி, சுற்றுலா அல்லது வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இரட்டை என்ஜின் அரசு பாடுபட்டு வருவதாக அவர் கூறினார். “முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த மாநிலமாக ஹரியானா உருவெடுத்து வருகிறது, முதலீடுகளை அதிகரிப்பது என்பது புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதாகும்” என்று கூறிய பிரதமர், தமது உரையை நிறைவு செய்தார்.

ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

சுமார் ரூ.5,450 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 28.5 கி.மீ நீளமுள்ள இந்தத் திட்டம், மில்லினியம் சிட்டி சென்டரை உத்யோக் விஹார் கட்டம்-5 உடன் இணைப்பதுடன் சைபர் சிட்டிக்கு அருகிலுள்ள மெளல்சாரி அவென்யூ நிலையத்தில் உள்ள ரேபிட் மெட்ரோ ரயில், குருகிராமின் தற்போதுள்ள மெட்ரோ நெட்வொர்க்குடன் இணைக்கும். குடிமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வெகுஜன அதிவேக நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான முக்கியமான படியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஹரியானா மாநிலம் ரேவாரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) அடிக்கல் நாட்டப்படுகிறது. சுமார் 1,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் ரேவாரியில் உள்ள மஜ்ரா முஸ்தில் பால்கி கிராமத்தில் 203 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படும். 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வளாகம், 100 இருக்கைகளுடன் மருத்துவக் கல்லூரி, 60 இருக்கைகளுடன் செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகள், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், இரவு தங்குமிடம், விருந்தினர் இல்லம், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளை இது கொண்டிருக்கும். பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ரேவாரி எய்ம்ஸ் கீழ்க்கண்ட வசதிகளை அளிக்கும். ஹரியானா மக்களுக்கு தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகள், இருதயவியல், இரைப்பை குடலியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல், எண்டோகிரனாலஜி, தீக்காயங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 18 சிறப்பு பிரிவுகள் மற்றும் 17 சூப்பர் சிறப்புப் பிரிவுகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் இதில் அடங்கும். தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, பதினாறு நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள், ரத்த வங்கி, மருந்தகம் போன்ற வசதிகளையும் இந்த நிறுவனம் கொண்டிருக்கும். ஹரியானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட்டிருப்பது, ஹரியானா மக்களுக்கு விரிவான, தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

குருஷேத்ராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனுபவ கேந்திரா ஜோதிசாரத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகம் சுமார் ரூ.240 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 17 ஏக்கர் பரப்பளவில் 100,000 சதுர அடி உட்புற பரப்பளவு கொண்டது. இது மகாபாரதத்தின் காவிய கதையையும் கீதையின் போதனைகளையும் உயிர்ப்புடன் கொண்டு வரும். பார்வையாளர்களின் அனுபவத்தை வளப்படுத்த 3டி லேசர் மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தையும் இந்த அருங்காட்சியகம் பயன்படுத்துகிறது. ஜோதிசாரம், குருக்ஷேத்ரா என்பது பகவத் கீதையின் நித்திய ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்கிய புனித இடமாகும்.

திவாஹர்

Leave a Reply