தமிழக அரசு, மேகதாது அணை சம்பந்தமாக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கர்நாடக அரசின் போக்கை கண்டித்து, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை முறியடிக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக மேகதாது அணை சம்பந்தமாக நிதி ஒதுக்கீடு செய்து, முன்னேற்பாடுகள், குழுக்கள், நீர் செல்லும் நிலப்பரப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததாக கூறியிருக்கிறார்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் தமிழக விவசாயிகளும், குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
கர்நாடக முதல்வரின் தற்போதைய அறிவிப்பை தெரிந்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கர்நாடக அரசின் மேகதாது அணை சம்பந்தமான அறிவிப்பை கண்டும் காணாமல், மெத்தனப் போக்கை கடைபிடித்து அரசியல் செய்வது நியாயமில்லை.
மேகதாதுவில் அணைக்கட்டக்கூடாது, தமிழகத்திற்கான காவிரி நீர் கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைத்திருந்தால் இந்நேரம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்திருக்க வேண்டும்,
எடுக்கவில்லை. அது மட்டுமல்ல தமிழ்நாடு, தமிழக விவசாயிகள், தமிழக மக்கள் என்பதை தாண்டி அரசியல் நட்பு, தேர்தல் வெற்றி என்ற குறிக்கோளோடு செயல்படுகிறது
தமிழக அரசு. அதனால் தான் மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் அறிவிப்பை பெரிதுப்படுத்தாமல், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காமல் செயலற்ற நிலையில் இருக்கிறது தமிழக அரசு.
மேலும் மேகதாது அணை, காவிரி நீர் சம்பந்தமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு ஆகியவற்றை மதிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன.
எனவே தமிழக அரசு, இனியும் கால தாமதம் செய்யாமல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு தமிழக விவசாயத்திற்கான, தமிழக மக்களுக்கான காவிரி நீரை உறுதியாக பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.