ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் திரு மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நாளைய ஜம்மு வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
திரு மோடியின் பொது நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான, தேவையான ஏற்பாடுகள் குறித்து சிவில் நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கினார்கள். “சங்கமும், நிர்வாகமும் ஒன்றிணைந்து அதற்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்திருப்பது தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தின் பத்து மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள் என்று அமைச்சர் கூறினார். பூஞ்ச், கிஷ்த்வார், ராம்பன் உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்று இரவு நகரத்திற்கு வருவார்கள் என்றும், அண்டை மாவட்டங்களான கதுவா, சம்பா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் நாளை காலை அந்த இடத்தை வந்தடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அழைப்பாளர்களுக்கு தங்குமிடம், சிற்றுண்டி சுகாதார வசதிகள் தொடர்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் வசதியான முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மத்திய அரசின் கல்வி, சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே, பெட்ரோலியம் ஆகிய நான்கு அமைச்சகங்களால் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பிரதமர் திரு மோடி உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். யூனியன் பிரதேசத்தில் இரண்டு எய்ம்ஸ், ஐஐஎம், ஐஐடி, ஐஐஎம்சி ஆகியவை நிறுவப்பட்டிருப்பது, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் திரு மோடி அதிக அளவு முன்னுரிமை அளிக்கிறார் என்பதற்கான சான்றாகும் என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்