தமிழக அரசு, 2024-25 – நடப்பு நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி போதுமானதல்ல!-ஜி.கே.வாசன் அறிக்கை.

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் பல இருந்தாலும் அவையெல்லாம் கடந்த 3 ஆண்டுகால வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்று, செயல்படாமல், விவசாயத்தை வளப்படுத்தாமல் இருந்ததைப் போல அமைந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தமிழக அரசின், 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டானது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி ரூ. 42,281.87 கோடி போதுமானதல்ல. அதுவும் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கியதும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கியதும் போதுமானதல்ல.

மேலும் வேளாண் பட்ஜெட்டில் கடந்த கால வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்ற அறிவிப்புகள் போல புதிய அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும், மன்னுயிர் காப்போம், ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், பசுந்தாள் உரம் தயாரிக்க நிதி, விவசயிகளுக்கு கூடுதல் மானியம், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், பயிர் சேதத்திற்கு நிதி, இயற்கைவள மேம்பாட்டுக்கு நிதி, மண்வளம் பாதுகாக்க நிதி, பயிர் காப்பீட்டிற்கு நிதி, உணவு மானியத்திற்கு நிதி, பயிர்க்கடன் வழங்க இலக்கு, சிறுதானிய இயக்கத்திற்கு நிதி, பந்தல் காய்கறிகள் பயிரிட நிதி, பேரீச்சை சாகுபடிக்கு நிதி, சர்க்கரைத்துறைக்கு நிதி என பல்வேறு அறிவிப்புகள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நல்லது.

ஆனால் இவை போன்ற பல்வேறு அறிவிப்புகள் கடந்த 3 ஆண்டுகால தமிழக தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்று, அவற்றிற்கு எல்லாம் ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படாமல், திட்டங்கள் எல்லாம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கவில்லை என்பதை விவசாயிகளே தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த விவசாயக்கடன் தள்ளுபடி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் இழப்பீட்டுத்தொகை, நெல்லுக்கும், கரும்புக்கும், தேங்காய்க்கும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஆதாரவிலை சம்பந்தமான அறிவிப்புகள் போன்றவை இடம் பெறவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டானது உழவர்களின், உழவுத்தொழிலாளர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

எனவே தமிழக அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வழக்கமான புதிய அறிவிப்புகள் அடங்கிய, விவசாயிகளை வஞ்சித்த, விவசாயத்தொழிலை பாதுகாக்க தவறுகிற வகையில் அமைந்திருக்கும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொண்டு, இந்த பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளையாவது முறையாக, முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply