ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, கர்னூல் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் விசாகப்பட்டினம் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம் (ஐஐஎஸ்) போன்ற பல முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்
ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்
ஜம்மு விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் மற்றும் ஜம்முவில் பெட்ரோலிய கிடங்கு மற்றும் பொது பயன்பாட்டு வசதி பணிமனைக்கு அடிக்கல் நாட்டினார்
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு குறிப்பிடத்தக்க சாலை மற்றும் ரயில் இணைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ஜம்மு காஷ்மீர் முழுவதும் குடிமை மற்றும் நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
“இன்றைய முன்முயற்சிகள் ஜம்மு-காஷ்மீரில் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்”
“ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியடைய செய்வதை நாங்கள் உறுதி செய்வோம்
Posted On: 20 FEB 2024 2:15PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்முவில் இன்று ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவை சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறையின் திட்டங்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1500 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்கினார். ‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
உஜ்வாலா திட்டத்தின் பலன்களை தான் பெற்றிருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கை சிறப்பானதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்காகவும் நேரம் ஒதுக்க உதவியுள்ளதாகவும் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீணா தேவி பிரதமரிடம் தெரிவித்தார். முன்பு, அவர் காடுகளில் இருந்து சமையலுக்காக விறகுகளை எடுத்து வந்தார். தனது குடும்பத்தினர் ஆயுஷ்மான் அட்டைகளை வைத்திருப்பதாகவும், அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் பிரதமரிடம் கூறினார். அவரும் அவரது குடும்பத்தினரும் நல்ல உடல் நலம் பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பயனாளியான கத்துவாவைச் சேர்ந்த கீர்த்தி சர்மா, சுய உதவிக் குழுவில் இணைந்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். 30,000 ரூபாய் கடனுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர், பின்னர் 1 லட்சம் ரூபாய் இரண்டாவது கடனுடன் மூன்று மாடுகளுடன் தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார். தனது குழுவினருக்கு மட்டுமல்ல, முழு மாவட்டத்தின் பெண்களுக்கும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அவரது குழு வங்கிக் கடனை திருப்பிச் செலுத்திவிட்டது, இப்போது அவர்களிடம் 10 மாடுகள் உள்ளன. அவரும் அவரது குழு உறுப்பினர்களும் பல அரசாங்க திட்டங்களால் பயனடைந்துள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் பிரதமரின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு லால் முகமது, தனது மண் வீடு எல்லைப் பகுதியில் இருப்பதாகவும், எல்லையின் மறுபுறத்திலிருந்து ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். தாம் தற்போது வசிக்கும் இடத்தில் ஒரு உறுதியான வீட்டைக் கட்டியதற்காக பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ரூ.1,30,000 பெற்றதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அரசின் திட்டங்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றடைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், லால் முகமதுவின் பாதுகாப்பான வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். திரு லால் முகமது பிரதமரைப் பாராட்டி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கருப்பொருளில் ஒரு இரண்டடி பாடலையும் வாசித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா