மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வடகிழக்கு மாநில மக்களுக்கு எளிதான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்த பிராந்திய பயிலரங்கை இன்று (21.02.2024) காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார், மேகாலயா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மெஸல் அம்பாரின் லிங்டோ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, ஆரோக்கியமான இந்தியாவுடன், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். நாட்டின் ஒவ்வொரு நபரும் தரமான சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். சுகாதார வசதிகள் அனைத்து பகுதிகளிலும் சீராகவும், தரமாகவும் கிடைக்கும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சி என்று அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் இந்த முழு பிராந்தியத்திற்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியத்தும் வாய்ந்த மருத்துவக்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
திவாஹர்