இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் தறை அமைச்சர் திருமதி கஜ்சா ஒல்லோங்கிரென்-னுடன் இன்று (பிப்ரவரி 23, 2024) புதுதில்லியில் பேச்சு நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தித் துறையில் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.  இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தனர்.

டச்சு அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (ஓஇஎம்), இந்திய விற்பனையாளர்களை தங்கள் விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆலோசனை கூறினார். இந்தியா ஒரு துடிப்பான புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறைச் சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். திறன்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா மற்றும் டச்சு நாடுகளின் பரஸ்பர ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் தொழில்கள், குறைக்கடத்திகள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்புக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

புதுதில்லியில் நடைபெறும் ரைசினா பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொள்கிறார்.

திவாஹர்

Leave a Reply