அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக்கோரி, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் என்.குமார், பி.வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு மீது கடந்த 6-ந்தேதி விசாரணை தொடங்கியது. இருதரப்பு வழக்கறிஞர்கள், அட்வகேட் ஜெனரல் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
10-ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு இன்று (11.02.2015) வழங்கப்பட்டது.
இதில், பவானிசிங்கை நீக்க கோரும் அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், பவானிசிங் அரசு வழக்கறிஞராக தொடர்வதற்கு கர்நாடக அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும், பவானிசிங் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டால், வழக்கின் இறுதி வரை அவரே அரசு வழக்கறிஞராக ஆஜராகலாம் என்றும் தீர்ப்பு அளித்துள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in