தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம் என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றப்படும்!-பா.ம.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை.

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதையும், சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை அனைவரும் அறிவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தான் தமிழ்நாட்டில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்த வரிசையில், இந்தியா முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதன் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், படிம எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக நிலக்கரிச் சுரங்கங்களை மூடுதல், புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல்மின் நிலையங்களுக்கு முடிவு கட்டுதல் உள்ளிட்ட கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்; குரல் கொடுக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள்:

  1. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சேத்தியாத்தோப்பு நிலக்கரிச் சுரங்கத் திட்டம், புதிய வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையங்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.
  2. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கத் திட்டம் மற்றும் முதல் இரு சுரங்கத் திட்டங்களின் விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
  3. என்.எல்.சி. நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
  4. கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு அனல்மின் திட்டங்களால், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை மாவட்டங்களின் சுற்றுச்சூழல் சீரழிக்கப்படுவதையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த பா.ம.க. பாடுபடும்.
  5. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மனித உடல்நலம், உயிரிப்பன்மயம், விதை இறையாண்மை, உணவுப் பாதுகாப்பு, பண்ணை வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்தியாவில் அறவே அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்துவோம். ஏற்கெனவே, அனுமதிக்கப்பட்ட பி.டி.பருத்தியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வு நடத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரவும் வலியுறுத்துவோம்.
  6. மரபணு மாற்றம் இல்லாத உணவுப் பொருட்களை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்யும் வகையில், மரபணு மாற்றம் இல்லாத உணவுப் பொருட்களுக்கான முத்திரை இடும் முறையை நவீனமாக்கி, குழப்பமின்றி, உறுதியாகச் செயலாக்கக் கோருவோம்.
    அணுஉலை இல்லாத் தமிழகம்
  7. தமிழ்நாட்டில் கடலூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, தூத்துக்குடி, எண்ணூர், பவானி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை மாசைக் கட்டுப்படுத்திச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் பா.ம.க. பாடுபடும். இதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் உதவியைப் பெற்றுத்தரும்.
  8. அணுஉலைகள் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். எனவே, தமிழ்நாட்டை அணுஉலைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அதைச் செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் & புதிய உலைகளுக்கு அனுமதி இல்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.
    பருவநிலை மாற்றம்
  9. இந்திய காலநிலைச் சட்டம்: இந்தியாவில் காலநிலைச் செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் அரசு அறிவிப்புகளாக மட்டும் இருந்தால் போதாது, மாறாக, அவை அரசின் சட்டமாக வேண்டும். இந்தியாவின் தற்போதைய சுற்றுச்சூழல் சட்டங்கள் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் அளவில் இல்லை. எனவே, இந்தியாவில் ஒருங்கிணைந்த காலநிலைச் செயல்பாட்டுக்கான சட்டம் கொண்டுவரப்படும்.
  10. தேசிய காலநிலை மாற்ற கவுன்சில்: இந்தியாவின் அனைத்து மாநிலச் சுற்றுச்சூழல் அமைச்சர்களையும் உள்ளடக்கி, தேசிய அளவிலான தேசிய காலநிலை மாற்ற கவுன்சில்அமைக்கப்படும். அந்தக் குழுவின் மூலம், ஜி.எஸ்.டி கவுன்சில் போன்றே காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
  11. ஐநா உடன்படிக்கைகளைச் செயலாக்குதல்: காலநிலை மாற்றம், உயிரிப்பன்மயம், நீடித்த வளர்ச்சி ஆகிய உன்னத நோக்கங்கள் தொடர்பான ஐநா உடன்படிக்கைகளான பாரிஸ் காலநிலை உடன்படிக்கை , ஐநா உயிரிப்பன்மயக் குறிக்கோள் , புதிய நகர்ப்புறச் செயல்திட்டம் , ஐநா நீடித்திருக்கும் வளர்ச்சிக் குறிக்கோள் 2030, உள்ளிட்டவற்றை முழுமையாகவும், மாநிலங்கள், உள்ளாட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியும், போர்க்கால நோக்கில் செயலாக்குவோம்.
  12. மத்திய அரசால் வகுக்கப்பட்ட உயிர்ப் பன்மயச் சட்டத்தின்படி, உயிர்ப் பன்மய மேலாண்மை குழுக்களை அமைத்தல், மக்கள் உயிர்ப் பன்மயப் பதிவேட்டை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதை மத்திய அரசு உறுதி செய்யும். மரங்கள் ஆணையம், சதுப்பு நில மேலாண்மைக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.
    நீடித்த மேம்பாட்டு இலக்குகள்
  13. 2016 – 2030 காலத்தில் ஒவ்வொரு நாடும் எட்டவேண்டிய நீடித்த மேம்பாட்டுக்கான 17 பெரு இலக்குகளையும், 169 குறு இலக்குகளையும், ஐக்கிய நாடுகள் அவை வகுத்துள்ளது. இந்த இலக்குகளை எட்டத் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும்.
  14. திடக்கழிவு மேலாண்மை: இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விதிகளை முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  15. காற்று மாசுபாடு: காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான தேசியத் தூயக் காற்று செயல்திட்டத்தை மேலும் வலிமையாக்கி முழுமையாகச் செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply