பொதுத் தேர்தல் 2024-ல் தவறான தகவல்களை முன்கூட்டியே முறியடிக்க ‘கற்பிதம் எதிர் உண்மை என்ற பதிவேட்டைத்’ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது .

தவறான தகவல்கள் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், தேர்தல் நடைமுறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கும், இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 பொதுத் தேர்தல்களின் ஒரு பகுதியாக ‘கற்பிதம் எதிர் உண்மை என்ற பதிவேட்டைத்’ இன்று அறிமுகம் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோரால் புதுதில்லியில் உள்ள நிர்வசன் சதனில் இன்று இது தொடங்கி வைக்கப்பட்டது.  தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://mythvsreality.eci.gov.in/)  மூலம் ‘கற்பிதம் எதிர் உண்மை என்ற பதிவேட்டை’ பொதுமக்கள் அணுகலாம். தவறான தகவல்களிலிருந்து தேர்தல் நடைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் தற்போதைய முயற்சிகளில் ‘கற்பிதம் எதிர் உண்மை என்ற பதிவேடு’ அறிமுகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

2024 பொதுத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பு குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், பணபலம், ஆள்பலம் மற்றும் தேர்தல் நடத்தைவிதி மீறல் ஆகியவற்றுடன் தவறான தகவல்களும் தேர்தல் நேர்மைக்கு சவாலாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார். உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தவறான தகவல்கள் மற்றும் தவறான கற்பிதங்கள் அதிகரிக்கும் கவலையாக மாறி வருவதால், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதுமையான மற்றும் செயலூக்கமான முயற்சி, தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் அணுகுவதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.

‘கற்பிதம் எதிர் உண்மை என்ற  பதிவேடு’ தேர்தல் காலத்தில் பரவும் கட்டுக்கதைகள் மற்றும் பொய்களை அகற்றுவதற்கு உண்மைத் தகவல்களின் விரிவான களஞ்சியமாக செயல்படுகிறது. இதன் மூலம் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பயனர் நட்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் / ஒப்புகைச் சீட்டு இயந்திரம், வாக்காளர் பட்டியல் / வாக்காளர் சேவைகள், தேர்தல்களை நடத்துதல் மற்றும் பிறவற்றைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கிறது. ஏற்கனவே பரவியுள்ள தேர்தல் தொடர்பான போலி தகவல்கள், சமூக ஊடக தளங்களில் பரவும் சாத்தியமான கட்டுக்கதைகள், முக்கியமான தலைப்புகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் குறிப்பு பொருட்கள் ஆகியவற்றை இந்தப் பதிவேடு வழங்குகிறது. பதிவேடு தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும்.

‘கற்பிதம் எதிர் உண்மை என்ற  பதிவேட்டில்’ வழங்கப்பட்ட தகவல்களுடன் எந்தவொரு வகையிலும் பெறப்பட்ட சந்தேகத்திற்குரிய தகவல்களை சரிபார்க்கவும் உறுதிப்படுத்தவும் அனைத்து பங்குதாரர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தகவல்களைச் சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும், 2024 பொதுத் தேர்தல்களின் போது முக்கிய பிரச்சினைகள் குறித்து அறிந்திருக்கவும் இந்த தளம் பயன்படுத்தப்படலாம். பயனர்கள் பதிவேட்டில் இருந்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

எம்.பிரபாகரன்

Leave a Reply