பெட்ரோலியத் துறையிலுள்ள அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, பெட்ரோலியத்துறையின் இரகசிய ஆவணங்களை, தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து உள்ளன. அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியத் துறை ஊழியர்கள் 2 பேர் உட்பட, 5 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்துள்ள சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சியின் போது, இது போன்று ஆவணங்கள் லீக் ஆவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. ஆனால், தற்போது கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டில்லியிலுள்ள ரிலையன்ஸ் அலுவலகத்தில் அம்மாநில போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
விரைவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-எஸ்.சதீஸ் சர்மா.