12 மாநிலங்களில் உள்ள 88 நாடாளுமன்ற தொகுதிகளில் 2024, ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, இதற்காக 89 பொது பார்வையாளர்கள், 53 காவல் துறை பார்வையாளர்கள் மற்றும் 109 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான 03.04.2024 க்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகளையும் குறிப்பாக வெப்பத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பார்வையாளர்களையும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு.ஞானேஷ் குமார், திரு.சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
வாக்குப்பதிவுக்கு தேவையானவற்றை அனைத்து தொகுதிகளிலும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்தல் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் அதாவது வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு சமமான வாய்ப்பு, தேர்தல் நடைமுறை நிறைவடையும் வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருத்தல்.
தங்கியிருக்கும் இடம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி, மொபைல் எண் ஆகியவற்றை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு விரிவான வகையில் தெரியப்படுத்துதல், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பது மற்றும் தேர்தல் பணி, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கான தபால் வாக்குப்பதிவு ஆகியவை சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தல். நுண் பார்வையாளர்கள் நியமனம், அனைத்துக் குறைகளுக்கும் தீர்வு காணுதல், வாக்குப்பதிவுக்கு முன்னதாக வாக்குச்சாவடி சீட்டுகளை 100 சதவீதம் அளவிற்கு விநியோகம் செய்தல், அரசியல் கட்சிகளுக்கும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டுமென்று மத்தியப் பார்வையாளர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா