பர்மிங்காம் பல்கலைக்கழகமும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி மெட்ராஸ்), இணைந்து நிலையான எரிசக்தி அமைப்புகள் தொடர்பான முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளன. புதிய பாடத்திட்டத்திற்கான விண்ணப்பங்களும் இப்பல்கலைக்கழகங்களால் வரவேற்கப்படுகின்றன.
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணை முதுகலை பட்டப்படிப்பு கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருவதால் புதிய படிப்பில் பட்டதாரிகளாக தேர்ச்சிபெறுவோர் நிபுணர்களாக செயல்படுவார்கள்.
இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து வழங்கும் ஒரே பட்டத்தைப் பெறுவதற்கு முன் மாணவர்கள் சென்னையிலும் பர்மிங்காமிலும் கல்வி கற்பார்கள். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து தனிநபர் ப்ராஜக்ட்களை மேற்கொள்வார்கள். தற்போதைய சூழலில் சவால்களை எதிர்கொள்வது பற்றி தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் அதுதொடர்பான படிப்புகளில் பர்மிங்காம் பல்கலைக்கழகம் நீண்ட நெடிய அனுபவத்தை உடைய கல்வி நிறுவனமாகும்.
மாணவர்கள் பர்மிங்காம் அல்லது சென்னை ஐஐடியில் தங்கள் படிப்பை நிறைவு செய்யும் வகையில் இப்பாடத்திட்டம் நெகிழ்வுத்தன்மையுடன் உள்ளது.
வாய்ப்பு 1- பர்மிங்காமில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்ட்டுடன் 12 மாதங்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கலாம்.
வாய்ப்பு 2- இங்கிலாந்தில் 6 மாதங்கள் கல்விகற்ற பின்னர், சென்னைக்கு திரும்பி சென்னை ஐஐடியில் இப்படிப்பை நிறைவு செய்யலாம். அத்துடன் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்டையும் மேற்கொள்ளலாம்.
எஸ்.சதிஸ் சர்மா