தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.
15-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பேசும் போது தெரிவித்தாவது:
தமிழக அரசு, மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் சிரமத்தை போக்குவதற்காக மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 15-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைந்து மாபெரும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.
விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் இம்முகாமில் கலந்து கொண்டு அரசின் மூலம் வழங்கப்படும் கீழ்க்கண்ட உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், நலவாரியம் அட்டை வழங்குதல், பார்வையற்றோர், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் அவர்களது துணையாளர்கள் உடன் செல்வதற்கு இலவச பஸ்பாஸ் வழங்குதல், பராமரிப்பு உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகை வழங்குதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சான்று, பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குதல், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், சுய உதவிக் குழுக்களில் இணைத்தல், வங்கிக் கடன் உதவி வழங்குதல், தொழில் துவங்க வங்கியாளர்கள் நேரில் வந்து தகுதியின் அடிப்படையில் கடன் வழங்க கூராய்வு செய்து வழங்குதல், மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்குதல், நல வாரிய அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, மூன்று சக்கர வண்டி, காதொலி கருவி, ஊன்றுகோல், தையல் மிஷின், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை கால் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், இலவச பட்டா வழங்குதல், IAY-பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடு வழங்குதல், மருத்துவ சிகிச்சை வழங்குதல் மற்றும் மருத்துவக் காப்பீடு, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன்கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம், இந்திரா நினைவுக்குடியிருப்புத் திட்டம், தனி நபர் இல்லக் கழிவறை கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலை அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளை சிறப்பு பள்ளியில் சேர்த்தல் போன்ற பல நலத்திட்ட உதவிகள் இந்த முகாமில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்குகிறோம் இதனை பயன்படுத்திக் கொண்டு இந்த அரசுகக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இன்று இங்கு நடைபெறும் முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 300 நபர்களுக்கு பசுமை வீடுகள், இலவச பேரூந்து பயண அட்டை, மூன்று சக்கர வாகனம், தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை, இலவச பட்டா, மடக்கு நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்றவை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
வருகிற 5.3.2015 அன்று புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற உள்ளது. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த முகாமில் கோவில்பட்டி கோட்டாட்சியர் டாக்டர்.கண்ணபிரான், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்.உமாமகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் ஓவம்மாள், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் ஆன்டணிமைக்கேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்டு, வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.