நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியன் இவர் இன்று (20.05.2024) தனது பெண் நண்பருடன் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். உணவருந்தி விட்டு வெளியே வந்த தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியனை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியதில் தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை கைப்பற்றி மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த தீபக் ராஜா என்கிற தீபக் பாண்டியன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் இவர் இன்று படுகொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
கடந்த மாதம் ஏப்ரல் 19-தேதி வரை மக்களவைக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருந்ததால் திரும்பிய திசையெல்லாம் பறக்கும் படைகள் வாகன சோதனை மற்றும் போலீசாரின் தீவிர ரோந்து பணி 24 மணி நேரமும் நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடூர குற்ற சம்பவங்கள் முழுமையாக கட்டுக்குள் இருந்து வந்தது. இதனால் குற்றச்ச சம்பவங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் பெருமளவில் குறைந்தது. குற்ற பின்னணி கொண்ட நபர்களின் வெளிப்படையான நடமாட்டமும் அவர்களின் மிரட்டலும், அச்சுறுத்தலும் முழுமையாக கட்டுக்குள் இருந்து வந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த இந்த ஒரு மாத காலத்திற்குள் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது.
எனவே உள்துறை அமைச்சகத்தை தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதில் சிறப்பு கவனம் செலுத்தி குற்ற பின்னணி கொண்ட நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் முன்னாள், இந்நாள் குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் பணத்திற்காக கொலை செய்யத் துணியும் கூலிப் படை கும்பலையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் சிறையில் இருந்து பிணையில் வெளியே வரும் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நபர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதைத்தவிர கொலை மற்றும் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் தண்டனை கைதிகளாக இருக்கும் நபர்களை சந்திக்க வரும் பார்வையாளர்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040