பெங்களூருவில் மத்திய சுரங்க அமைச்சகம் சார்பாக கிரானைட் மற்றும் சலவைக்கல் சுரங்கம் குறித்த பயிலரங்கம்.

மத்திய சுரங்க அமைச்சகம், பெங்களூரில் கிரானைட் மற்றும் மார்பிள் எனப்படும் சலவைக்கல் சுரங்கம் குறித்த பயிலரங்கை ஏற்பாடு செய்தது. மத்திய சுரங்க அமைச்சக செயலாளர், திரு வி.எல்.காந்தா ராவ் பயிலரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றினார். கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், மேம்பாட்டு ஆணையருமான டாக்டர் ஷாலினி ரஜ்னீஷ் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இந்தப் பயிலரங்கில் சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் வீணா குமாரி, கர்நாடக அரசின் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை செயலாளர் திரு ரிச்சர்ட் வின்சென்ட், பெங்களூரு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த செயல்பாட்டாளர்கள், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மாநில சுரங்க மற்றும் புவியியல் இயக்குநரக பிரதிநிதிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், தனியார் சுரங்கத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ் தனது உரையில், சுரங்கத் துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை விளக்கினார்.  சிறு கனிமத் துறையிலும் இதுபோன்ற சீர்திருத்தங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், என்.ஜி.டி.ஆர் (தேசிய புவி-தரவு களஞ்சியம்) தளம் மூலம் ஆய்வு குறித்த விரிவான தரவு மற்றும் தகவல்களை மத்திய அரசு கிடைக்கச் செய்திருப்பது, அனைத்து பங்குதாரர்களுக்கும் தரவுகளை அணுக உதவுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். மத்திய நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளால் இயக்கப்படும் இந்த முயற்சி, சுரங்கத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திரு வி.எல்.காந்தா ராவ், சிறு கனிமத் துறையை விரிவாக சீர்திருத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசுகள் தீர்வுகளைத் தேடும் ஒரு சிந்தனை அமர்வாக இந்தப் பயிலரங்கம் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் மேம்பாட்டு ஆணையருமான டாக்டர் ஷாலினி ரஜ்னீஷ் தனது முக்கிய உரையில், கிரானைட் மற்றும் சலவைக்கல் சுரங்கத் துறையில் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் பிற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சுரங்கம் உட்பட எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சுரங்கத் துறையின் முக்கியமான பகுதிகளை நிர்வகிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், குறைபாடுகளைக் குறைக்கவும் தகவல் தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடக்க அமர்வில், கிரானைட் சுரங்கம் மற்றும் சலவைக்கல் சுரங்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பல்வேறு பங்குதாரர்கள் செயல்விளக்கங்களை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் தொழில்துறை சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் செயல்விளக்கங்களை வழங்கியதுடன், கிரானைட் மற்றும் சலவைக்கல் கனிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளையும் எடுத்துரைத்தன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply