மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெக்கான் நிறுவனம் இந்திய எஃகு ஆணையத்துடன் (செயில்) இணைந்து நடத்தும் மூலதனப் பொருட்கள் மீது கவனம் செலுத்துகின்ற எஃகு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு 2024 மே 30 அன்று ராஞ்சியில் தொடங்கியது.
தொழில்நுட்ப வழங்குநர்கள், எஃகு உற்பத்தியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய எஃகு தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைப்பதும், புதிய கூட்டாண்மைகளை வளர்ப்பது, புதுமையான தீர்வுகளை ஆராய்வது, எஃகு தொழில்துறையின் எதிர்காலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது ஆகியவையும் இந்த மாநாட்டின் நோக்கங்களாகும்.
மெக்கான் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சஞ்சய் குமார் வர்மா அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்று மாநாட்டின் பின்னணி குறித்து எடுத்துரைத்தார். மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய அரசின் எஃகு அமைச்சக செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா, கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திருமதி சுக்ரிதி லிக்கி, இணைச் செயலாளர்கள் திரு அபிஜித் நரேந்திரா, டாக்டர் சஞ்சய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய திரு நாகேந்திர நாத் சின்ஹா, துல்லியமான திட்டமிடலும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதும் நாட்டில் அமைக்கப்பட்டு வரும் எஃகு திட்டங்களுக்கு மிகப்பெரிய சவால்களாக மாறியுள்ளன என்றார். எஃகு திட்டங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அவற்றின் நிலைத்தன்மைக்காகவும் நமது திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கு புதுமையான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கனரகத் தொழில் துறைக்கு புத்துயிர் அளிக்க, புதிய செயல் முறைகள், புதிய சிந்தனைகள், புதிய திறமைசாலிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய எஃகு கொள்கை-2017 குறித்து பேசிய மெக்கான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், 300 மெட்ரிக் டன் எஃகு திறனை எட்டுவதற்கான கொள்கை இலக்கின்படி, அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் சுமார் 138 முதல் 139 மெட்ரிக் டன் புதிய திறன் சேர்க்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் இந்திய எஃகுத் தொழில் மூலம் 120 முதல் 130 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
திவாஹர்