கேரளாவின் கொச்சியில் 2024, மே 20 முதல் மே 30 வரை 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனை மற்றும் 26-வது அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
மைத்ரி-2 என்ற பெயரில் அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. இது அமைதி, அறிவியல் ஒத்துழைப்பு, மனிதகுலத்தின் நலனுக்காக அண்டார்டிகாவைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் மூத்த அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.
இந்தக் கூட்டத்தில் இந்தியக் குழுவுக்கு தலைமை வகித்து பேசிய புவி அறிவியல் துறையின் செயலாளர் திரு எம் ரவிச்சந்திரன், மைத்ரி-2 ஆய்வகத்தை அண்டார்டிகாவில் அமைப்பதற்கான விரிவான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை இந்தியா விரைவில் சமர்ப்பிக்கும் என்றார். இந்தக் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெறுவது அண்டார்டிகாவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் கூட்டு உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், அண்டார்டிகாவில் சிறந்த சூழல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் 26-வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டம் அர்ஜென்டினாவை தலைமையிடமாகக் கொண்ட அண்டார்டிகா ஒப்பந்த செயலகத்தின் ஆதரவுடன் கொச்சியில் நடத்தப்பட்டது. கோவாவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மூலம் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2024 மே 20 முதல் 24 வரை நடைபெற்ற அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 26-வது குழுக் கூட்டத்தில், அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடல் பனி மேலாண்மை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேம்படுத்துதல், பென்குயின் பறவைகளைப் பாதுகாத்தல், அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான சர்வதேசக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவைத் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற அண்டார்டிகா விவகாரங்கள் குறித்த உலகளாவிய கூட்டத்தில் 56 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் அறிவியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று கொள்கை வகுப்பது, செயல்பாடுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட அண்டார்டிகா தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர்.
எம்.பிரபாகரன்