ஆயுதப்படையினருக்கு தொலைவழி மனநல ஆலோசனை பிரிவை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் கையெழுத்திட்டன.

புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னோடித் திட்டமாக ஆயுதப்படையினருக்கு சிறப்பு தொலை வழி மனநல ஆலோசனை பிரிவை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் கையெழுத்திட்டன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆராதனா பட்நாயக், ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சிறப்பு தொலைபேசி வழி மனநல ஆலோசனை பிரிவு 2023 டிசம்பர் 1, அன்று புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் திறந்துவைத்தார்.

இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை தவிர்க்க ஆயுதப்படைகளில் தொலை-மனநல மருத்துவ சேவைகளின் தேவை அவசியமாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் உள்ள சிரமங்கள் களையப்படும். அவர்களின் தனித்துவமான மனநலத் தேவைகள் உடனடியாகவும் திறம்படவும் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆயுதப்படை வீரர்களுக்கு மனநல ஆலோசனைக்கான நீண்டகால தேவை உள்ளது என்றும், இப்போது, அர்ப்பணிக்கப்பட்ட டெலி மனாஸ் பிரிவு மூலம், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 24 மணி நேரமும் மனநல உதவியைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் மனநலக் கவலைகள் மிகவும் திறம்பட நிவர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆராதனா பட்நாயக், ஆயுதப் படைகளின் தனித்துவமான மனநலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மனநலப் பிரச்சினைகளை களைய வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டினார்.

2022 அக்டோபர் மாதத்தில்  இந்த தொலைவழி மனநல ஆலோசனைப் பிரிவு தொடங்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் சராசரியாக 3500 அழைப்புகளோடு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. நாடு முழுவதும் 51 தொலைவழி மனநல ஆலோசனை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply