இந்திய தர கவுன்சில் (கியூசிஐ) உலக அங்கீகார தினத்தை இன்று இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டாடியது. “அங்கீகாரம்: நாளை அதிகாரமளித்தல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். சீனிவாஸ், இந்திய தர கவுன்சிலின் தலைவர் திரு ஜக்சே ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைத்து துறைகளிலும் வாழ்க்கைத் தரத்தை வடிவமைப்பதில் அங்கீகாரத்தின் பங்கு குறித்து விவாதித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜேஷ் குமார் சிங், நிலையான நடைமுறைகளைத் தாண்டி, கூட்டத்திலிருந்து நம்மை தனித்து நிற்கச் செய்யும் செயல்முறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அங்கீகார அமைப்பையும், ஒட்டுமொத்த தர அமைப்பையும் வலுப்படுத்துவது ஒரு தேவை மட்டுமல்ல, சிறப்பை நோக்கிய ஒரு உத்திசார் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசு மற்றும் இந்திய தொழில்துறையால் 1997-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய தர கவுன்சில், மூன்றாம் தரப்பு தேசிய அங்கீகார முறையை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும், துறைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கும், தரம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அரசு மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பொறுப்பான இந்தியாவின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்படுகிறது.
எம்.பிரபாகரன்