ஐக்கிய நாடுகள் சபையின் ஆறாவது சுற்றுச்சூழல் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீடித்த வாழ்க்கை முறை குறித்த தீர்மானத்தை அமல்படுத்துவதை ஊக்குவிக்குமாறு பிரிக்ஸ் நாடுகளை பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 10-வது கூட்டம் ரஷ்ய கூட்டமைப்பின் தலைமையில் மெய்நிகர் வடிவத்தில் இன்று நடைபெற்றது, இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய ஐந்து புதிய உறுப்பினர்கள் இணைந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

சுற்றுச்சூழல் சவால்களை சமாளிப்பதற்கான செயல் திட்டம், முன்னுரிமைகள் ஆகியவற்றை விரிவடைந்துள்ள பிரிக்ஸ் அமைப்பு இப்போது நடைமுறைப்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் கூறினார். பிரிக்ஸ் அமைப்பின் கீழ், முன்முயற்சிகள் ஐ.நா அமைப்பு மற்றும் அதன் முகமைகளின் கொள்கைகள், இலக்குகள் ஆகியவற்றால் உறுதியாக வழிநடத்தப்படுகின்றன என்றும், பிரிக்ஸ் நாடுகள், கார்பன் உமிழ்வு குறித்த பிரச்சனையில் வளரும் நாடுகளை வலியுறுத்த வேண்டும் என்றும், வளரும் நாடுகள் அதனை ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை சமாளிப்பதில் நீடித்த வாழ்க்கை முறைகளின் முக்கியத்துவத்தை திரு யாதவ் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆறாவது சுற்றுச்சூழல் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீடித்த வாழ்க்கை முறை குறித்த தீர்மானத்தை அமல்படுத்துவதை பிரிக்ஸ் நாடுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வளரும் நாடுகளுக்கு சம வாய்ப்புள்ள களம் தேவை என்று வலியுறுத்திய திரு யாதவ்,  உறுதியளிக்கப்பட்ட நிதி உட்பட அமலாக்க வழிமுறைகளுக்கான தங்கள் கடமைகளை வளர்ந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பருவநிலை நிதியை முதலீட்டு வழிமுறையாக பார்க்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட்டில் நடைபெற்ற இந்த 10 -வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திவாஹர்

Leave a Reply