மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (30-06-2024) குஜராத்தின் நாடியாட்டில் உள்ள கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் (கேடிசிசி) 76 வது வருடாந்திரக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அத்துடன் அங்கு ரூ. 18 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட வங்கியின் புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். குஜராத் மாநிலக் கூட்டுறவு அமைச்சர், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) தலைவர் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் வெற்றிகரமான வழிகாட்டுதலின் கீழ் அமுல் நிறுவனம் தொடங்கப்பட்ட மாவட்டம் கேதா என்று கூறினார். கூட்டுறவின் மூலம் வளம் என்ற இலக்கை அடைவதற்கு அமுல் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று அவர் கூறினார். சில காலத்திற்கு முன்பு கேதா மாவட்ட கூட்டுறவு வங்கியை மூடுவது குறித்து பேசப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால் இன்று இந்த வங்கி 36,000 சதுர அடியில் சொந்தமாக கட்டடம் கட்டி செயல்படத் தொடங்கியுள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியில் கூட்டுறவு அமைச்சகத்தை தனி அமைச்சகமாக நிறுவினார் என்று திரு அமித் ஷா கூறினார்.
வங்கியின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, குஜராத்தின் கூட்டுறவு வங்கி அமைப்பில் முதன்முறையாக கடன் மேலாண்மை, ஆவண மேலாண்மை முறை மற்றும் டேப்லெட் வங்கி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் கூறினார். 1950-ல் இந்த வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து, இது இப்பகுதியின் விவசாயிகளுக்கு நன்கு சேவை செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பங்களிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
எம்.பிரபாகரன்