புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்துக்கு குடியரசுத்துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கண்டனம் –

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (06-07-2024) பங்கேற்று உரையாற்றினார்.

 நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெக்தீப் தன்கர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ஒருவர், பகுதி நேர நாடாளுமன்ற உறுப்பினர்களால் மூன்று புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறியதற்குக் கண்டனம் தெரிவித்தார். அவரது வார்த்தைகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். மூத்த உறுப்பினரான அவர், கூறிய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் குடியரசுத்துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பாகப் பேசிய அவர், இந்த நிறுவனம் விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் திட்டங்களின் வெற்றியைப் பாராட்டிய திரு ஜெக்தீப் தன்கர், இந்தத் திட்டங்கள் இந்தியாவின் சக்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்றார். இவை லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டிய திரு தன்கர், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறை என்று விவரித்த அவர், கல்வி சமத்துவத்தை வளர்த்து ஏற்றத்தாழ்வுகளை மாற்றுகிறது என்றார்.

இஸ்ரோவுக்குத் தாம் சென்றதை  நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், அங்கு நடைபெறும் பணிகளால் தாம் உத்வேகம் பெற்றதாகவும் உற்சாகமடைந்ததாகவும் கூறினார்.

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு எஸ் சோம்நாத்,  விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் நாயர்,  இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply