கேலோ இந்தியா மகளிர் வுஷு லீக் போட்டிகளின் வரவிருக்கும் வடக்கு மண்டல சுற்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க உள்ளது, இதில் முக்கிய சர்வதேச விளையாட்டு வீரர்கள் அயீரா சிஸ்டி, கோமல் நகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் ஜூலை 9 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி, சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் 350 விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது. இந்திய விளையாட்டு ஆணையம் பாட்டியாலாவில் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஹரியானா, பஞ்சாப், தில்லி, இமாச்சலப்பிரதேசம், சண்டிகர், உத்தராகண்ட், ஜம்மு கஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்திய வுஷூ கூட்டமைப்பு நடத்திய ரூ.7.2 லட்சம் பரிசுப் போட்டிக்கு விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி அளித்துள்ளது.
சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் போட்டிகளில் முதல் 8 வுஷூ விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். கர்நாடகாவில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்த தென் மண்டல நிகழ்வைத் தொடர்ந்து, வடக்கு மண்டலப் போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெறவுள்ளன. நான்கு மண்டல போட்டிகளுக்குப் பிறகு, தேசிய தரவரிசை சாம்பியன்ஷிப் நடைபெறும்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டிகள், பெண் விளையாட்டு வீரர்களிடையே பரவலான பங்கேற்பை ஊக்குவிப்பதுடன் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு திறன் நிலைகள் மற்றும் வயதினரிடையே திறமை அடையாளம் மற்றும் மேம்பாட்டை எளிதாக்குகிறது.
எஸ்.சதிஸ் சர்மா