பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (12.07.2024) கூட்டாக சந்தித்தனர்.
போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், வேளாண்மை, அறிவியல், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் குழுவினருடன் பிரதமர் பயனுள்ள ஆலோசனைகளை நடத்தினார். இந்த பிராந்தியத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
அமைதியான, வளமான, பாதுகாப்பான பிம்ஸ்டெக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையையும், கிழக்கத்திய நாடுகள் தொடர்பான கொள்கையையும் விவரித்தார். இந்தியாவின் கொள்கைகள் இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்டது என எடுத்துரைத்தார்.
செப்டம்பரில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டையொட்டி அந்நாட்டுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
திவாஹர்