2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருத்து ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், அது ஒரு புனிதமான இயக்கமும் ஆகும் எனவும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மும்பையில் இன்று நர்சி மோன்ஜி மேலாண்மைக் கல்வி நிறுவன (என்எம்ஐஎம்எஸ்) மாணவர்கள், ஆசிரியர்களிடையே உரையாற்றிய அவர் இந்த நூற்றாண்டு பாரதத்திற்கு சொந்தமானது என்று கூறினார். ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிறுவனமும், நமது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ச்சியான முன்முயற்சிகளின் விளைவாக, வர்த்தக சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், முதலீடுகளுக்கான விருப்பமான இடமாக இந்தியா தற்போது பார்க்கப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு தன்கர், இந்த பயணம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விரைவடைந்ததாக கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் எழுச்சி மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவும், தேசத்தை இழிவுபடுத்தவும், களங்கப்படுத்தவும் சில தீய சக்திகள் உள்ளதாக அவர் கூறினார். தேசத்தின் வளர்ச்சிப் பாதையை களங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்மறை சக்திகளை எச்சரிக்கையுடன் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பழங்கால கல்வி நிறுவனங்களின் வரலாற்றை எடுத்துரைத்தார். தேசிய வளர்ச்சியிலும் அதிகாரமளித்தலிலும் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.
வளர்ந்து வரும் துறைகளில் உள்ள மகத்தான வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்