தோஹாவில் இந்திய-கத்தார் கூட்டு பணிக்குழு கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வர்த்தகத் துறையும் பிற அமைச்சகங்களும் அடங்கிய இந்திய தூதுக்குழுவினர், தோஹாவில் நடைபெற்ற இந்திய – கத்தார் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் 2024 ஜூலை 10 அன்று பங்கேற்றனர்.

சரக்குப் போக்குவரத்து, சுங்கக் கட்டுப்பாடு ஆகியவற்றை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தின்போது இரு தரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றை விரைவாக முடிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வர்த்தகத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்சினைகளையும் விரைவாகத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டை எளிதாக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு வர்த்தக மேம்பாட்டிலும் பொருளாதார ஒத்துழைப்பிலும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த கூட்டு பணிக்குழு கூட்டத்திற்கு மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறைப் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி.நாயர், கத்தார் அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களின் இயக்குநர் திரு சலே அல்-மனா ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023-24-ம் ஆண்டில் 14.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கத்தாரின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா உள்ளது. கூட்டுப் பணிக் குழுவின் அடுத்த கூட்டத்தை 2025-ம் ஆண்டில் புதுதில்லியில் நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

திவாஹர்

Leave a Reply