உலகில் உள்ள அத்தனை மக்களும் பேசும் மொழி வெவ்வேறாக இருந்தாலும், அர்த்தம் மாறாமல் வருத்தத்துடன் சொல்கின்ற வார்த்தைகள் ‘ஆண்டவன் எனக்கு மட்டும்’ ஏன் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறான்? என்ற கேள்விதான்.
இதற்கு காரணம் நம் மீதும், நம் சமூகத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமைதான். நம் வாழ்க்கையின் பெரும் பகுதி பயத்தில் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமக்கு எப்போதெல்லாம் பயம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம்.
சோர்வு, பயம், கோபம், அருவருப்பு… இதெல்லாம் நமக்குள்ளே எங்கே உண்டாகிறது? நமது கையிலோ, காலிலோ, நுரையீரலிலோ, மூச்சுக் குழாயிலோ இல்லை! நமது எண்ணங்களில் மட்டுமே நிகழ்கிறது! அப்படியென்றால் ‘எண்ணம்’ என்பது என்ன? உதட்டையும், நாக்கையும் அசைக்காமல் நமக்குள்ளேயே வார்த்தைகளை ஓடவிடும் போதுதான் எண்ணங்கள் உருப்பெறுகின்றன. வார்த்தைகளும், வாக்கியங்களும் இல்லாமல் நம்மால் சிந்திக்க முடியாது!
ஆண், பெண், சிறியவர், பெரியவர்… என்று அது யாராக இருந்தாலும், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது.
குளிர்காலம், கோடைகாலம், இலையுதிர் காலம், வசந்தகாலம் என்று பூமிக்கு வேண்டுமானால் பருவக் காலங்கள் மாறி, மாறி வரலாம். ஆனால் சூரியனுக்கு எந்தப் பருவமும் கிடையாது. அது போல் உடம்புக்குதான் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், வயோதிகப்பருவம் எல்லாம், ஆனால் மனசுக்கு எந்தப் பருவமும் கிடையாது. நாம் நம் மனதை எந்தக் காலக்கட்டத்திலும் துடிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.
துக்கமான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ… அதை நாம் விலகி நின்று பார்க்கும் போது, நமக்குள்ளே ‘புரிந்து கொள்ளுதல்’ நடக்கும்!
இது போன்ற மனநிலையை நாம் எய்தி விட்டால் துன்பம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி… எல்லாமே ஒன்றுதான்! மகிழ்ச்சி எப்படி ஓர் அனுபவமோ அதே போல் துன்பமும் ஓர் அனுபவமே!
தோல்வி என்பது கற்றுக் கொள்வது! வெற்றி என்பது பெற்றுக் கொள்வது! முதலில் நாம் கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
தீப்பந்தத்தைப் பூமியை நோக்கி கவிழ்த்தாலும், தீயின் ஜீவாலை வானத்தை நோக்கி தான் இருக்கும்! ஒரு மரம் நல்ல மரமா, இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை! அந்த மரம் கொடுக்கும் கனிகளையும், பயன்களையும் வைத்துதான் மரம் சிறந்ததா, இல்லையா? என்று உலகம் தீர்மானிக்கும். அதே போல தான் நீங்கள் சாதிக்கப் பிறந்தவரா, இல்லையா என்பதை உங்களைக் கேட்டு இந்த உலகம் தெரிந்துக் கொள்ளாது. உங்களின் சாதனையை வைத்து தான் உலகம் உங்களை எடைப்போடும் என்பதை மறந்து விடாதீர்கள்!
‘நான் கடவுளுக்கு பயந்தவன்’ என்று நம்மில் பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம்! இது போலித்தனமான வார்த்தை! கடவுளிடம் நாம் செலுத்த வேண்டியது அன்பு தானே தவிர, பயமில்லை.
எந்த மதமாக இருந்தாலும் அவைகள் ‘அயலானுக்கு அன்பு காட்டு’ ‘தன்னை நேசிப்பதைப் போல பிறரையும்; நேசி’ என்று தான் போதிக்கிறது. இந்த வாக்கியங்கள் தான் பைபிள், கீதை, குரான்… என்று எல்லா மதங்களின் வேதத்திலும் வெவ்வேறாக வார்த்தைகளில் இருக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சகமனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்! – இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொரு வரும் ஏற்றுக் கொண்டால், மதத்தின் பெயரால் மட்டுமில்லை… ஜாதி, இனம், மொழி… எந்த காரணம் கொண்டும் பிரச்சனைகள் தலை தூக்காது! உணர்ச்சிகளை மறந்து விட்டு வெற்று வார்த்தைகளை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால் தான் மதத்தின் பெயரால் இப்போது கலவரங்கள் நடக்கின்றன!
அதைக் கொடு… இதைக் கொடு… என்று ஆண்டவன் நம்மிடம் ஒரு போதும் கேட்பதில்லை. நாம் தான் ஆண்டவனிடம் பிராத்தனை என்ற பெயரில் சதா நச்சரித்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்! பிராத்தனை என்பது நம்மை நாமே முழுமையாக உணர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.
உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமி பந்துவரை, நமக்காக இயற்கை எத்தனையோ பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறது! இதற்கெல்லாம் என்றைக்காவது நாம் இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லி இருக்கிறோமா? மாறாக மேலும், மேலும்… ஆண்டவனிடம் புலம்பிக் கொண்டே தான் இருக்கிறோம். தயவு செய்து புலம்புவதை நிறுத்தி விட்டு, இது நாள் வரை பெற்றுக் கொண்டமைக்காக நம்பிக்கையோடு இறைவனுக்கு நன்றி சொல்வோம்… அது தான் உண்மையான பிராத்தனையாக இருக்கும்.
மனிதா நீ மரணத்தை கண்டு கலங்காதே! ஏனென்றால் “இந்தப் பூமியிலே வந்து நீ பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்… நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக் கூடும்! எனவே மரணத்தை கண்டு கலங்காதே” மனிதன் காற்றை சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழ வில்லை, நம்பிக்கையை சுவாசிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு இப்புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்.
என்றும் தோழமையுடன்,
டாக்டர் துரைபெஞ்சமின்
(ஆசிரியர் & வெளியீட்டாளர்)