பொய் செய்தி வெளியிட்டதாக தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் மீது தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தரராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அமைச்சர் சார்பில், மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பர் 7ம் தேதி தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியில், ‘அமைச்சர் ஆய்வின்போது பெண் ஊழியர் மரணம்‘ என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. அதில், ‘கோதைநாயகியின் திடீர் மரணம் கோ,ஆப்டெக்ஸ் ஊழியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் திட்டியதால்தான் கோதைநாயகி இறந்தார் என்று ஊழியர்கள் கூறுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி முழுக்க, முழுக்க உண்மைக்கு புறம்பானது. செய்தி வெளியிடும் முன்பு சம்பந்தப்பட்ட துறையிடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். வேண்டுமென்றே தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இச்செய்தி வெளியிட்டதில் உள் நோக்கம் உள்ளது.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பாக, படிப்பவர்களை திசைதிருப்பும் வகையில் உள்ளது. எனவே, இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் இந்திய தண்டனை சட்டம்; 500 (அவதூறு செய்தல்) 501 (அவதூறு விஷயத்தை அச்சிடுதல்) ஆகிய பிரிவின் கீழ் குற்றம் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது இந்த சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பா.அன்பரசன்.