“அல்லா மீது ஆணையாக
நான் இந்தக் குழந்தையின் கழுத்தை
நசிக்க வில்லை”
சவுதி அரேபியா தவாத்மி நகரில் 09.01.2013 மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் இறுதி வார்த்தை இது தான்! ரிசானா நபீக் விடுதலை செய்யப்பட்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பு, ஆசை, வேண்டுகோள், கோரிக்கை, பிரார்த்தனை என்று எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைத்தது அந்த துயர்ச்செய்தி. கேட்டவுடன் மனத்தின் வலி கண்களில் கசிந்தது. மலரும் முன்னரே கசக்கப்பட்ட மொட்டு. சட்டத்தின் தீர்ப்புகள் நியாயத்தை காக்கின்றனவோ என்னவோ. மனிதத்தை கொல்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானா நபீக்கின் உடல் அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா மே மாதம் 22 ம் திகதி 2005 ம் ஆண்டு கொலை செய்ததாக 16 ம் திகதி ஜூன் மாதம் 2007 ஆம் ஆண்டில் டவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. அத் தீர்ப்புக்கெதிரான ரிசான நபீக்கின் மேல் முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் டவடாமி மேல் நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தன்டனைத் தீர்ப்பினை உறுதி செய்தது.
4 மாத குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சவூதி அரேபியா தவாத்மி என்ற ஊரில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். பின் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு 09.01.2013 காலை 11 மணியளவில் சிரச்சேதம் செய்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து ரிசானாவின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்தது. ஆனால் சவுதி சட்டப்படி உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென சவுதி அரசு அறிவித்து விட்டது.
இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் உடல் சவுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அங்குள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எஸ்.சதிஸ்சர்மா