ஓட்டுப் போடும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து பெரிதும் விலகிப் போய் அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மக்களின் பொறுமல் சாதாரணமாக பல நாடுகளிலும் கேட்க முடியும்.
ஜனாதிபதி என்றாலே…நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் உருகுவே நாட்டில் அது வல்ல நிலைமை. ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றார்.
அதிபரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலை பார்த்து இந்தப் பண்ணையில் மலர்கள் வளர்க்கின்றனர்
செடிகளும், கோரைப் புற்களும் பெரிதாக வளர்ந்து கிடக்கும் திறந்த வெளியில், தன்னந்தனியாக நிற்கிறது தகர மேற்கூரை கொண்ட கொட்டகை போன்ற அந்த சாதாரண வீடு, வெளியே கொடியில் துணி காய்கிறது. வீட்டுக்கு முன்னால் நொண்டி நாய் ஒன்று திரிந்துகொண்டிருக்கிறது. வெறும் இரண்டு பொலிஸ்காரர்கள் அந்த வீட்டுக்கு முன் காவலுக்கு நிற்கிறார்கள். கிணற்றுத் தண்ணீரை விட்டால் அந்த வீட்டுக்கு வேறு தண்ணீர் கிடையாது.
நம்பக் கடினமாக இருந்தாலும் இந்த வர்ணனைக்குரிய இடம் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா வீடு.
உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா வாழும் விதத்தை மற்ற நாட்டின் அதிபர்களுடைய வாழ்க்கைத் தரத்தோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.
மாளிகை வேண்டாம், சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதிபருக்குரிய மாதச் சம்பளமாக தனக்கு வரும் பனிரெண்டாயிரம் டாலரில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்தையும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக ஜோஸ் முஜிகா நன்கொடையாக வழங்கி விடுகிறார்.
உலகிலேயே வருமானம் மிகவும் குறைவாகக் கொண்ட எளிமையான, ஏழை அதிபர் என்றால் அது ஜோஸ் முஜிகா தான்.
“என் வாழ்க்கையின் பெரும்பங்கை நான் இப்படித் தான் வாழ்ந்திருக்கிறேன். இதனை வைத்துக் கொண்டே என்னால் நலமாக வாழ்ந்து விட முடியும்” என்கிறார்.
உருகுவேயில் பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து மதிப்பை ஜோஸ் முஜிகா வெளியிட்டபோது, அது வெறுனே $1800 டாலர்களாகத்தான் இருந்தது. அவருக்குச் சொந்தமான 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் காருடைய மதிப்பு இது.
இந்த வருடம், தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு என்பனவற்றில் பாதியளவை அவர் தனது சொத்தாக காட்டியுள்ளார். ஆக இந்த வருடம் அவருடைய சொத்துமதிப்பு இரண்டு லட்சத்து பதினையாயிரம் டாலர்களாக உள்ளது.
1960 -களில் கூபாவில் புரட்சி நடந்த சமயத்தில் உருகுவேயில் கெரில்லா தீவிர இடதுசாரி அமைப்பில் அங்கம் வகித்த ஜோஸ் முஜிகா, ஆறு முறை துப்பாக்கி சூடு வாங்கியுள்ளார், 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் இவர் உருகுவேயில் அதிபராக இருந்துவருகிறார்.
ஏன் இந்த எளிய வாழ்க்கை என்று கேட்கப்போனால், “என்னைப் பார்க்க லூசுக் கிழவனாகத் தெரியும் ஆனால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நான் தேர்வு செய்த வாழ்க்கை முறை இது” இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அனாயசமாக பதிலளிக்கிறார்.
மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும், இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள் தான் ஏழைகள்.
உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக யாரும் ஜனாதிபதியாக முடியாது. எனவே, 2014-ல் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் ஜோஸ் முஜிகா, ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக காலம் கழிப்பார் என்று நம்பலாம்.