இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வர்த்தகமாக திகழும் தேயிலை வியாபாரத்திலும் சீனா களமிறங்கியுள்ளது. தனது நாட்டுக்குத் தேவையான விசேட தேயிலை, இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் சீனா உற்பத்தி செய்யவுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில், இந்திய, சீனப் போட்டி நிலவுகின்றது. இந்தப் போட்டிக்கு களமாக இலங்கை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையிலுள்ள பெரும்பான்மையான தேயிலைத் தோட்டங்கள் இந்திய நிறுவனங்களுக்கே சொந்தமாகவுள்ளன.
இந்த நிலையில் சீனாவும் தேயிலை உற்பத்தியில் களமிறங்குகின்றது.இலங்கையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு முதலீட்டுச்சபை அனுமதி அளித்துள்ளது.
எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சீனாவின் யுன்னான் டியன்ஹொங் குழுமத்தைச் சேர்ந்த யென்ஹொங் அனைத்துலக நிறுவனம் இந்தச் சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்யவுள்ளது.
இந்தக் கூட்டுமுயற்சி நிறுவனம், உயர்தரம் வாய்ந்த சீன சிறப்புத் தேயிலையை உற்பத்தி செய்து, தனது நாட்டின் சந்தைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யவுள்ளது. சீன சிறப்புத் தேயிலை, எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் மலையகத் தோட்டங்களில் பயிரிடப்படவுள்ளது.
இந்தக் கூட்டுமுயற்சி, வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதாகவும், சீனச் சந்தைக்கு கூடுதல் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
|