இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழக கிராமங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டித்து வவுனியாவில் கண்டனப் பேரணியொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
வவுனியா மன்னார் வீதியில் இருந்து வவுனியா அரச செலயகத்தைச் சென்றடைந்த பேரணியின் முக்கிய பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடனான ஐம்பதினாயிரம் வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இஸ்டத்திற்கு அராசங்க அதிபரும், பிரதேச செயலாளர்களும் பாரசட்சமாகச் செயற்பட்டு வருகின்றனர் என்று அந்த மகஜரில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
செட்டிகுளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட வவுனியா பிரதேசத்தில் 8120 தமிழ்க்குடும்பங்களுக்கும், 1483 முஸ்லிம் குடும்பங்களுக்கும் வீடுகள் தேவையாக இருக்கின்றன. எனினும், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1400 வீடுகள் தமிழ்க் குடும்பங்களுக்கும், 1634 வீடுகள் முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்று மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு விபரம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் தமிழ்க்கிராமங்களுக்கு நியாயமான அடிப்படையில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை தொடர்பில் பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
இரு தரப்பினரையும் நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதி, மக்களுடைய ஜனநாயக உரிமைகளை நீதிமன்றம் மதிக்கின்ற அதேநேரம், இரண்டு அணிகள் மோதிக் கொள்ளத்தக்க வகையில் ஒரே நாளில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டி, தமிழர் தரப்பினரை புதன்கிழமையும், முஸ்லிம் தரப்பினரை வெள்ளிக்கிழமையும் தமது கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டிருந்தது.
அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், எவரேனும் குழப்பம் விளைவித்தால், அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.
இதனையடுத்து, புதனன்று தமிழ்த் தரப்பினர் தமது கவனயீர்ப்புப் பேரணியை நடத்தி ஜனாதிபதிக்கான மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் தமிழர் தரப்பினருடைய குறைகள், கோரிக்கைகள் என்பவற்றை விரிவாகக் கேட்டறிந்ததுடன், அது குறித்து விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் பொன்னையா தனஞ்சயநாதன் தெரிவித்தார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுத்துள்ளார். இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் தனக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது என்றும், இதனை அரசாங்க அதிபர் அலுவலகமே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.