சென்காகு தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜப்பானுக்கே சொந்தமான பகுதி என்றும் அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
சென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளுக்கு சீனா அத்துமீறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியைக் கண்காணிப்பதற்காக சீனா கப்பல்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. இரு நாடுகளையும் சேர்ந்த விமானங்களும் இப்பகுதியில் பறந்து செல்வதால் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக ஜப்பான் சமீபத்தில் சில ராஜரீக முயற்சிகளைத் தொடங்கியது. சீன ஆதரவு அதிகாரிகள் சிலரை அந்நாட்டுக்கு ஜப்பானிய அரசு பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது.
இந்நிலையில், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் பேசுகையில், “நம் நாட்டைச் சுற்றிலும் பாதுகாப்புச் சூழ்நிலையானது மிகவும் மோசமாகி வருகிறது.
நமது பிரதேச உரிமைகள் விஷயத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நாம் சந்தித்து வருகிறோம். எனினும், இப்போதைய அச்சுறுத்தலை எதிர்த்து நிற்பதிலும், மக்களின் உயிர், உடமைகள் மற்றும் நமது நிலம், தீவுகள், கடல், வான்பகுதி ஆகியவற்றைக் காப்பதிலும் நான் முன்முயற்சி எடுப்பேன்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.