ஹிட்லரும், இரண்டாம் உலகப் போரும்!ஹிட்லர் பதவிக்கு வந்து 80 ஆண்டுகள் நிறைவு சிறப்புக் கட்டுரை!

 Hitlerமுதலாம் உலகப்போரின் போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்தவர் ஹிட்லர். ஜெர்மனியின் தலைவராக வேண்டும், உலக நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி, அகில உலக சக்கரவர்தியாக வேண்டும் என்று ஹிட்லர் தீர்மானமாக இருந்தார். அதற்காக திட்டமிட்டு செயலாற்றத் தொடங்கினார். தன் திட்டத்தின் முதல் கட்டமாக தேசிய சோஷலிசம் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.

 1921-ல் அக்கட்சியின் தலைவர் ஆனார். அதன் பின் கட்சி வளர்ச்சி பணியில் கவனம் செலுத்தினார். 1932-ல் நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றிப் பெற்றார். 1933 ஜனவரி 30-ம் தேதி ஜெர்மனியின் பிரதமரானார். 1934-ல் ஜெர்மனியின் ஜனாதிபதி இறந்து போனார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியையும் ஹிட்லர் கைபற்றிக் கொண்டார். எதிர்ப்பாளர்களையெல்லாம் அழித்து விட்டு  தானே சர்வாதிகாரி ஆனார்.

 முதல் உலக போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணமாக இருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக ஹிட்லர் உருவாக்கினார்.

1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி எவ்வித போர் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர் பிரகடனம் வெளியிட்டது. ஆனால் போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால் இரண்டே வாரங்களில் போலந்தை ஹிட்லரின் ஜெர்மன் படை கைபற்றியது.

hitler -musolini இந்த சமயத்தில் ஹிட்லருடன் நட்பு கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி. ஜப்பான் உள்பட வேறு சிறு நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்ரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கி அப்பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.

 1940 மே 10-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார். பிரிட்டன் படைகள் பிரான்ஸ்க்கு ஆதரவாக அனுப்பப்பட்டன என்றாலும், ஜெர்மனியின் டாங்கி படைக்கும், விமான படைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பிரிட்டன் படைகளும், ப்ரெஞ்சு படைகளும் தினறின.

 பிரான்ஸ் ராணுவத்தில் 51 லட்சம் வீரர்களும், பிரான்சுக்கு ஆதரவாக 7 லட்சம் பிரிட்டிஷ் ராணுவத்தினரும் இருந்தும் கூட, ஜெர்மன் படையை வெல்ல முடியவில்லை. ஜெர்மனியின்  4000 விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் மீது குண்டுகளை சரமாரியாக வீசின. அதே சமயத்தில் ஜெர்மனியின் தரைப் படைகளும், பிரான்ஸ் தலைநகர் பாரீசை நோக்கி முன்னேறியது. 1940 ஜீலை மாதம் பாரீஸ் நகரை ஜெர்மனி படையினர் முற்றுகையிட்டனர்.

போரில் பிரான்ஸ் வீரர்கள் 5 லட்சம் பேர் மாண்டார்கள், 10 லட்சம் பேர் சிறை பிடிக்கப்பட்டனர். உடனே சரணடையாவிட்டால் பாரீஸ் நகரத்தை எரித்து சாம்பலாக்குவேன் என்று ஹிட்லர் கொக்கரித்தார். இதன் காரணமாக 1940 ஜுன் 14-ம் தேதி ஜெர்மனியிடம் பிரான்ஸ் சரணடைந்தது. ஹிட்லர் நேரடியாக பாரீஸ் நகருக்கு சென்று சரணாகதி பத்திரத்தில் ப்ரெஞ்சு பிரதமரிடமும், ப்ரெஞ்சு ராணுவத்திடமும் கையெழுத்து வாங்கினார்.

 இதற்கிடையே பெல்ஜியம், போலந்து, நார்வே, ஹோலந்து, டென்மார்க், ஸ்விடன், யூக்கோஸ்லோவியா போன்ற நாடுகள் ஜெர்மனியின் வசமாகி இருந்தன. அடுத்து ஹிட்லர், பிரிட்டன் மீது குறிவைத்தார். தானாக சரணடையுங்கள் இல்லையென்றால் பிரிட்டனை அடியோடு அழித்து விடுவேன் என்று மிரட்டினார். அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் சர்சில். நாங்கள் உங்களிடம் சரணடைவதா? கனவு கானாதே, உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று ஹிட்லருக்கு சர்சில் பதில் அளித்தார்.

 1940 ஜுலை 10-ம் தேதி தனது விமான படையை பிரிட்டன் மீது ஏவி விட்டார் ஹிட்லர்.  ஜெர்மன் போர் விமானங்கள் அணி அணியாக பறந்து சென்று பிரிட்டன் மீது குண்டு மழை பொழிந்தது. ஜுலை 28-ம் தேதிக்குள் 7500 தடவை விமான தாக்குதல் நடந்தது. லண்டன் மாநகரத்தின் மீதும் குண்டு வீச்சு நடந்தது. பிரிட்டிஷ் விமானப் படை எதிர் தாக்குதல் நடத்தியது.

575 ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பிரிட்டன் இழந்தது 100 விமானங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியின் விமானத் தாக்குதல் 6 மாதம் நீடித்தது. ஆனால் பிரிட்டன் மலை போல நிமிர்ந்து நின்றது. சர்சில் பின்னால் பிரிட்டிஷ் மக்கள் வீரத்துடனும், ஒற்றுமையுடனும் ஓர் அணியில் நின்றனர். பிரிட்டனை சரணடைய செய்ய முயன்ற ஹிட்லர் பெருத்த ஏமாற்றத்தை அடைந்தார். இங்கிலந்து மீது விமான தாக்குதல் நடத்துவதை நிறுத்தி விட்டு, ரஷ்யாவின் மீது தன் பார்வையைத் திருப்பினார். ரஷ்யாவை பிடித்துவிட்டால் பிரிட்டன் தானாக பணிந்து விடும் என்று நினைத்தார்.

முதல் உலகப்போரின் போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷ்யா, அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை மீறி 1941 ஜுன் 22-ம் தேதி ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்தது. ஜெர்மனி படைகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து ரஷ்யாவுக்குள் புகுந்தனர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அப்போது ரஷ்யாவின் அதிபராக இருந்த ஸ்டாலின் இரும்பு போன்ற மன உறுதியுடன் ஜெர்மனி படையை எதிர்கொண்டார். ரஷ்ய புரட்சி நாளான நவம்பர் 7-ம் தேதிக்கு மாஸ்கோவை கைபற்றி விட வேண்டும் என்பது ஹிட்லரின் திட்டம்.

அக்டோபர் 14-ம் தேதி மாஸ்கோவை ஜெர்மனி படைகள் நெருங்கிவிட்டனர். இன்னும் 9மையில் தூரம் தான் பாக்கி. விரைவில் மாஸ்கோ வீழ்ந்து வீடும் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ரஷ்ய மக்கள் ஜெர்மனி படைகளை எதிர்த்து வீரமாக போரிட்டனர். ரஷ்ய சிப்பாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஜெர்மனி ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஜெர்மனி படைகள் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது. பின் மெல்ல மெல்ல ஜெர்மனி படைகள் பின்வாங்கின.

 இந்த சமயத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள போர் துறைமுகத்தை 1941 டிசம்பர் 7-ம் தேதி தாக்கியது. அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்க போர் கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத் தாக்குதலில் அழிந்தன. 3000 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதுவரை போரில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்த அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது. அப்போது அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர் பிரகடனமும் செய்தார்.

இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசு நாடுகளும் ஓர் அணியாக நின்று, ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தினர். ரஷ்யாவை வீழ்த்தி பிடித்து விடலாம் என்று நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஆப்ரிக்காவை கைப்பற்ற நினைத்த ஹிட்லரின் நண்பர், இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காக சென்ற ஜெர்மனி ராணுவத்தினர் 2லட்சம் பேர் சரணாகதி அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றி இருந்த ரஷ்ய பகுதிகளை மீட்க ரஷ்ய படைகள் மின்னல் வேக தாக்குதல் நடத்தினர்.

அதில் 1லட்சம் ஜெர்மனி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்கு தோல்விக்கு மேல் தோல்வி தொடர்ந்து ஏற்பட்டது.

     – டாக்டர்.துரைபெஞ்சமின்

 

 

 

                      

Leave a Reply