பிப்ரவரி 20-ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்! மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

clip_imaவரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரியும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது, கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசு சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசும் இதற்கு முதலில் ஒப்புக்கொண்டது. ஆனால் பின்னர் கர்நாடக அரசியல்வாதிகளின் நெருக்கடியை அடுத்து தனது முடிவில் இருந்து பின்வாங்கி, முடிந்த அளவு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளிவராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனிடையே கர்நாடக சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும் இதில் ஒரு முடிவெடுக்க முடியாமல் இருந்து வந்தது.

 இந்நிலையில், கடந்த ஜனவரி 4ம் தேதி இவ்வழக்கு விசாரணையின் போது, தண்ணீர் திறந்து விடாத கர்நாடகத்திற்கும், அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வெளியிடாத மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. பின்னர் இவ்வழக்கு 04.02.2013  ஒத்திவைக்கப்பட்டது.

 இன்று ( 04.02.2013 )  நடந்த விசாரணையின் போது, கடந்த 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் தவறி விட்டது என்றும், வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி., தண்ணீரை தமிழகம் திறந்து விட வேண்டும் என்றும், அதற்கு ஈடான நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் தண்ணீர் தேவை குறித்து இரண்டு நாட்களில் அறிக்கை அளிக்கும்படி, மத்திய நீர்வள கமிஷனுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

 

Leave a Reply