தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (4.2.2013) தலைமைச் செயலகத்தில், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்த மும்பையில் வாழும் தமிழ்ப் பெண் பிரேமாவிற்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை ஊக்கத் தொகையாக வழங்கி, வாழ்த்தினார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருபவருமான ஜெயக்குமார் என்பவரின் மகள் பிரேமா என்பவர் அண்மையில் நடைபெற்ற சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றார்.
மிகவும் கடினமான இந்த தேர்வில் முதலிடத்தைப் பெற்று தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை தேடித் தந்த பிரேமாவை பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 24.1.2013 அன்று அறிவித்தார்.
அதன்படி, பிரேமாவிற்கு அவரின் சாதனையைப் பாராட்டி முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை ஊக்கத் தொகையாக வழங்கி, மேலும் பல சாதனைகளை புரிந்து, வாழ்வில் வளம் பெற வேண்டுமென்று வாழ்த்தினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து ஊக்கத் தொகையினை பெற்றுக் கொண்ட பிரேமா, தன்னை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டி நிதியளித்து வாழ்த்தியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றிகளை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் மற்றும் அவரது சகோதரர் உடனிருந்தனர்.