உத்தர பிரதேச மாநிலத்தில் வாழும் வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதாக அம்மாநில போலீஸ் ஐ.ஜி. பத்ரி பிரசாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
வி.ஐ.பி.க்கள் மட்டுமின்றி தனிநபர் ஒருவருக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல் தொடர்பாக விசாரித்து, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிய வந்தால் மிரட்டலுக்கு உள்ளாகும் நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முறைப்படியான விசாரணையின் மூலம் போலீசாருக்கு கிடைக்கும் தகவல்கள், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் அனுமதியின் பேரில் உரிய நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
கட்சி பேதங்களுக்கு இடமின்றி, 1496 வி.ஐ.பி.க்களுக்கு இந்த வகையில் பாதுகாப்பு அளிக்கும் பணியில் 2 ஆயிரத்து 913 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, ஆண்டுதோறும் ரூ.120 கோடி மாநில அரசின் சார்பில் செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.