இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு, எனவே அதை அடைவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65-வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் மற்றும் விடுதலைக்கு பின்னர் இலங்கையை ஆட்சி செய்த சிங்களப் பேரினவாதிகளின் சதியால், இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர். இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என்பதால், அதை அடைவதற்காக போராடி வந்தனர். இலங்கைப் பிரச்னைக்கு தீர்வுகாண 1987-ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, 13-வது அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி இதை ஏற்க ஈழத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு , தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக்கொண்டது.
அதன்பின்னர், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வியடைந்தது. போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு வந்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய போது, ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதாக இராஜபக்சே உறுதியளித்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இலங்கை அதிபர் இராஜபக்சேவை, அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டிணா சந்தித்த போதும், 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படியான அதிகாரங்கள் மட்டுமின்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்கி தமிழர்கள் தன்னாட்சியுடன் வாழ வகைசெய்யப்படும் என இராஜபக்சே உறுதி அளித்திருந்தார். இதே வாக்குறுதியை அவர் பலமுறை இந்தியாவுக்கு வழங்கியிருந்தார்.
ஆனால், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இராஜபக்சேவின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வகை செய்வோம் என்று கூறிவரும் இந்திய அரசை அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து போரின் போதும், போருக்குப் பிறகும் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு, இப்போது சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம்மை எட்டி உதைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்திய அரசு இனியாவது உணர வேண்டும்.
தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கூட வழங்காமல் அடிமைகளாகவே வைத்திருக்கத் துடிக்கும் சிங்களப் பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து தமிழர்கள் கண்ணியமாகவோ அல்லது சுயமரியாதையுடனோ வாழ முடியாது என்பதை இந்தியா உணர வேண்டும். காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருவதைப் போல, இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதால் அதை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.