வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்!

mathiya guluதமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் கருகி வருவதால் காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும் என கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழகத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் நிபுணர் குழுவை அனுப்பி நீர் தேவை மற்றும் பயிர்களின் நிலைமை பற்றி ஆராய்ந்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய வேளாண்மை துறை துணை ஆணையர் பி.கே ஷா தலைமையில் மத்திய நீர்வள துறை தலைமை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப், செய்பொறியாளர் தங்கமணி ஆகியோர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் 04.02.2013 அதிகாலை திருச்சி வந்தனர். திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கிய இந்த குழுவினர் 04.02.2013 காலை சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், தமிழக வேளாண்மை துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண்மை துறை ஆணையர் சிவதாஸ் மீனா, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனையின்போது தமிழக அதிகாரிகள் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், டெல்டா மாவட்டங்களில் கருகிய நிலையில் உள்ள நெற்பயிர்களின் நிலை பற்றி எடுத்துக்கூறினார்கள்.
இதனை தொடர்ந்து மத்திய நிபுணர் குழுவினரும், தமிழக அதிகாரிகளும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்களின் நிலைமையை அறிவதற்காக புறப்பட்டனர். அப்போது தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:–

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய வேளாண் துறை துணை கமிஷனர் ஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வந்து உள்ளனர். இந்த குழுவினர் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கான நீர் தேவை, பயிர்களின் நிலைமை பற்றி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து 06.02.2013 அறிக்கை தாக்கல் செய்வார்கள். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டு செல்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நிபுணர் குழுவினர் தஞ்சை செல்லும் வழியில் திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில் நடப்பட்டு கருகிய நிலையில் இருந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர். நிபுணர் குழுவினர் காரை விட்டு இறங்கியதும் விவசாயிகள் அவர்களை வயல் வெளிக்கு அழைத்துச் சென்றனர்.

பாப்பாக்குறிச்சி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து இருந்ததாகவும் கதிர் பிடிக்கும் நிலையில் உள்ள இந்த நேரத்தில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருவதாகவும், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் தான் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் முறையிட்டனர். மேலும் காவிரியில் தண்ணீர் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து விட்டதால் மின்சார மோட்டார் மூலமும் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்றும் புகார் கூறினார்கள்.
விவசாயிகள் கூறிய புகார்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகளை மத்திய நிபுணர் குழுவினர் கவனமாக கேட்டனர். பின்னர் அவர்கள் கார் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் தமிழக அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.

Leave a Reply