ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த எஸ்.ஆர்.புரம் மண்டலம் மிட்டா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 03.02.2013-ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அவரை வைத்திருந்தனர். அப்போது அந்த பெண்ணை கார்வேட் நகரத்தை சேர்ந்த போலீஸ்காரர் கோபி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து சித்தூர் எஸ்.பி.யிடம் 05.02.2013 அன்று புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி. அன்னபூர்ணா நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சித்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இரவு நேரத்தில் மகளிர் போலீஸ் இல்லாமல் காவல் நிலையத்தில் இளம்பெண்ணை வைத்திருந்ததற்காக எஸ்.ஐ. ரவிநாயக், உதவி எஸ்.ஐ. ராஜேந்திரா, கான்ஸ்டபிள் ரமணா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. கிராந்தி ராணா டாடா உத்தரவிட்டார்.
பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் போலீஸ்காரர் கோபி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.