உலக வரலாற்றில் முக்கியமானதொன்றாக விபரிக்கப்படும் மகாத்மா காந்தியின் கடிதம் ஒன்று பிரிட்டனில் எதிர்வரும் வாரம் ஏலத்தில் விடப்படவுள்ளது.
1943 இல் புனேயிலுள்ள அஹா மாளிகையில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வீட்டுக் காவலில் மகாத்மா காந்தி வைக்கப்பட்டிருந்த போது 3 பக்கத்திலான இந்த ஆவணக் கடிதம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு அவரால் எழுதப்பட்டது.
மகாத்மா காந்தியுடன் அவருடைய ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கான பெண்களும் , ஆண்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது செல்வாக்கால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என அரசு நினைத்தால் தனது எதிர்கால வாழ்க்கையை ஏதேனுமொரு சிறைச்சாலையில் கழிக்க விரும்புகின்றேன். ஆனால், சிறைகளிலிருக்கும் சக ஆதரவாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டு மகாத்மா காந்தியால் இக் கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது.
பொது மக்கள் நிதிகள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் விரயமாக்கப்படுவதாக மகாத்மா காந்தி குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அந்நிதியை நிவாரணங்களுக்கு வழங்குமாறு தெரிவித்திருந்தமையையடுத்து அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1943 ஒக்டோபர் 26 ஆம் திகதியிடப்பட்ட இக் கடிதம் இந்தியாவின் அரசு உதவிச் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அத்துடன், இக் கடிதத்தில் இரு எழுத்துப் பிழைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.