மதுரை உத்தங்குடியை சேர்ந்த வக்கீல் திருஞானம், மதுரை, அவனியாபுரம் காஜாமொய்தீன், மக்தும் ஆகியோர் சொந்த வேலையாக காரில் சென்னை சென்று விட்டு நேற்றிரவு (09.02.2013) மீண்டும் மதுரை புறப்பட்டனர். காரை செல்வபிரபு என்பவர் ஓட்டினார். இவர்கள் இன்று (10.02.2013) காலை 6 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டத்தை அடுத்த அளுந்தூர் என்ற இடத்தில் சென்ற போது,
சிமென்ட் ஏற்றிய லாரி ஒன்றின் மீது கார் மோதியது. இதில் வக்கீல் திருஞானம், காஜா மொய்தீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செல்வபிரபு, மக்தும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மணிகண்டம் போலீசார் அங்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.