சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிங்கள அதிபர் ராஜபக்சே!

  சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் இந்தியப் பயணம் அவருக்கு பெருத்த அவமானத்தையும் சங்கடத்தையுமே அவருக்கு உருவாக்கியுள்ளது. RAJAPATCHA F பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவுக்குச் செல்வதாக மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட இந்தியப் பயணம் உண்மையிலேயே ஆன்மீக நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அது மிகவும் முக்கியமான அரசியல் இலக்கோடு மேற்கொள்ளப்பட்டது. ஆன்மீகப் பயணம் என்ற பெயரில், இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ள உறவை மேம்படுத்தி, எதிர்வரும் ஜெனிவா ஐ.நா. அமர்வில் தனக்கு எதிராக உருவாக்கக்கூடிய அழுத்தங்களுக்கு எதிராக இந்திய ஆதரவைக் கோருவதுதான் அவரது முதன்மைத் திட்டமாக இருந்தது. 

 pathamavathy-1

1600 இந்துக் கோவில்களை அழித்த ராஜபக்ஷ பக்தி மேலீட்டால் திருப்பதிக்கு விஜயம் செய்தார் என்று நம்ப முடியாது. இந்திய ஆட்சியின் பங்காளர்களது மாநிலங்களுக்குச் செல்வதன் மூலம் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய உறவின் மூலமாகத் தனது தொடர் இருப்புக்கு ஆபத்து நேராமல் பார்த்துக்கொள்வதே அவரது எண்ணமாக இருந்தது. 

 ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு இன்னமும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அவர் மேற்கொண்ட ஆன்மீக நாடகப் பயணம் கிட்டத்தட்ட அவருக்கே வினையாகவே முடிந்துள்ளது. 

INDIA-SRI LANKA-RELIGION மகிந்த ராஜபக்சேயின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், மக்களும் சிங்களக் கொடிகளையும், மகிந்தவின் கொடும்பாவியையும் கொழுத்தியுள்ளார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திற்கு வெளியே, டெல்லியிலும், பீகாரிலும், திருப்பதியிலும்கூட போராட்டங்களும் கைதுகளும் இடம்பெற்றுள்ளன. 

 ஆக மொத்தத்தில், தமிழக எல்லைக்குள் மட்டுப்பட்டிருந்த தன்மீதான கண்டன எதிர்ப்பு வாதத்தை அவரது இந்தப் பயணம் தமிழகத்திற்கு வெளியேயும் கொண்டு சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநில தொலைக் காட்சிகளிலும் இது குறித்த விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. 

 இறுதி யுத்தத்தின் பின்னர், ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தியப் பயணத்தை மேற்கொண்ட சிங்கள அதிபர் ராஜபக்சேவுக்கு அப்போது இந்த அளவு எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பவில்லை. இந்தத் தடவை ராஜபக்சேக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் பொங்கி எழுந்ததற்கு என்ன காரணம் என்பதைச் சற்று ஆராய்வோம். 

 ஈழத் தமிழர்கள்மீது கொடூரமான இன அழிப்புப் போரை நிகழ்த்திய சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக, அந்தப் போருக்கான முழு அனுசரணையையும், ஆதரவையும் இந்திய ஆட்சியாளர்கள் வழங்கியிருந்தார்கள் என்ற கோபமும், 35 கடல் மைல் தொலைவில் தங்களது உறவுகள் கொடூரமாக அழிக்கப்பட்ட போது, தம்மால் எதையுமே செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் எப்போதும் தமிழக மக்களிடம் உள்ளது. அதன் வெளிப்பாடு இப்போது இன்னும் பலமாக வெடித்துக் கிளம்பியதற்கு, இந்திய மத்திய ஆட்சியாளர்கள்மீது தற்போது தமிழக மக்கள் பெருமளவில் நம்பிக்கை இழந்துவிட்டதே காரணமாக அமைந்தது. 

 இந்தியாவால் கொண்டவரப்பட்ட 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற தமிழகத் தமிழர்களது நம்பிக்கை தகர்ந்துவிட்டது. கடந்த பெப்ரவரி 04-ம் திகதி சிங்கள அதிபர் ராஜபக்சே சிறிலங்காவின் சுதந்திர தின உரையில், தமிழர்களுக்குத் தனியான எந்த அரசியல் அதிகாரமும் வழங்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த நிலையில், மகிந்தவின் இந்திய வருகைக்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமாகத் தமிழக மக்கள் இந்திய மத்திய ஆட்சிக்கும் ஒரு கடுமையான செய்தியைச் சொல்லியுள்ளார்கள். 

 ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும். ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இதுவரை நீதியாக நடந்து கொள்ளாத இந்திய அரசு, இனியும் அப்படி நடக்குமானால் தமிழகம் அதனை வேடிக்கை பார்க்காது என்பதையே தமிழக மக்களும், அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தின் மூலம் இந்திய ஆட்சியாளர்களுக்கு விடுத்துள்ள செய்தியாகும். 

 இது, ஜெனிவா மாநாட்டில் இலங்கை சார்பான எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத தர்மசங்கட நிலையை இந்தியாவுக்கு உருவாக்கியுள்ளது. இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட தறித்து வீழ்த்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. காங்கிரஸ் கூட்டாளிக் கட்சியான தி.மு.க. ஆட்சி இழந்ததற்கும் இறுதி யுத்த காலத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதமே முக்கிய காரணமாக அமைந்தது.

 அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈழப் பிரச்சினையே முக்கிய வாதப் பொருளாக இருக்கப் போகின்றது. இதனாலேயே கலைஞர் கருணாநிதி, தன்னால் முடிச்சுக்கட்டிப் பரணில் போடப்பட்டிருந்த ‘டெசோ’ வைத் தூசு தட்டி எடுத்து, புதிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். கொடூரமான யுத்தம் நிகழ்ந்த காலத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமாக எதையுமே செய்யாமல், ஈழத் தமிழர்களது அழிவுக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்போது கருப்புச் சட்டைப் போராட்டம் நடத்துவதற்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலே காரணம் என்ற தமிழுணர்வாளர்களின் குற்றச்சாட்டிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. 

 ஆக மொத்தத்தில், தனது பாரியாரும், 70 பரிவாரங்களும் புடைசூழ மகிந்த மேற்கொண்ட இந்தியப் பயணம் சொந்தக் காசில் தனக்கே சூனியம் வைத்தது போலாகியுள்ளது. தமிழகத்தின் எழுச்சி தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பற்றிப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தத் தடவை ஜெனிவா முன்றலில் நடைபெறவுள்ள போராட்டம் மிக உச்சமாக இருக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கப்போகின்றது. 

                                                                                                                                 – இசைப்பிரியா

Leave a Reply