நாட்டில் அரசியல் மாற்றத்தை உருவாக்கிய முக்கிய வழக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த கண்காணிப்பையும் மீறி, சி.பி.ஐ. வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவும் ஒருவர். இவர் பயனடையும் வகையில் செயல்பட்டதாகத்தான் ஆ.ராசா மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தகைய சஞ்சய் சந்திராவும், சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங்கும் ரகசிய உரையாடல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இருவரின் உரையாடல் அடங்கிய கேசட், சி.பி.ஐ.யிடம் சிக்கி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட அந்த கேசட் 17 நிமிடங்கள் ஓடுகிறது. அதில், வழக்கு பற்றி பல்வேறு வியூகங்களை சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் கற்று கொடுத்துள்ளார்.
முக்கிய அரசுத்தரப்பு சாட்சி எப்படி சாட்சி அளிப்பார்? தனது தரப்பு வாதத்தை சஞ்சய் சந்திரா எப்படி நடத்த வேண்டும்? சி.பி.ஐ.யின் வியூகம் ஆகியவற்றை அவர் சொல்லி கொடுத்துள்ளார்.
இந்த கேசட்டின் அடிப்படையில், ஏ.கே.சிங், சஞ்சய் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை பதிவு செய்துள்ளது. இருவரிடமும் நேற்று சி.பி.ஐ. தலைமையகத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் சி.பி.ஐ. வக்கீல் பொறுப்பில் இருந்து ஏ.கே.சிங் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு வக்கீல் நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு, ஊழல் கண்காணிப்பு துறை, மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த பிரச்சினை குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித் சின்கா கூறியதாவது:-
அந்த கேசட்டில் இருப்பது ஏ.கே.சிங்-சஞ்சய்
சந்திரா ஆகியோரின் குரல் தானா? என்று என்னால் உறுதியாக கூற முடியாது. அதுபற்றி தடயவியல் சோதனையில்தான் தெரியும். ஆனால், மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, அது உண்மைபோல தான் தோன்றுகிறது.
ஏ.கே.சிங், நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவரின் தவறான செயல்பாட்டால், சி.பி.ஐ.யின் நேர்மைக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.