சென்னையில் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, பழநெடுமாறன் உள்பட 500 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. செயலகம் முன்பு கடந்த 2009–ம் ஆண்டு பிப்ரவரி 12–ந்தேதி தீக்குளித்து மரணம் அடைந்த முருகதாசனின் நினைவு நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு 12.02.2013 முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். போராட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்பட 30–க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா. மன்றத்திற்கு எதிராகவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். போராட்டம் குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
ஐ.நா மன்றம் கடமை தவறிவிட்டது, மனித உரிமையை காக்க வேண்டிய ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், அவரது ஆலோசகர் விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் திட்டமிட்டு லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து உண்மைகளை மூடி மறைத்து விட்டனர். இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு படுகொலைக்கு உடந்தையாக இருந்த ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நாங்கள் கேட்பது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, இனப்படுகொலை விசாரணை மட்டுமே. மேலும் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவும் கோரி ஐ.நா. மன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறோம்.
சுதந்திர தமிழ் ஈழத்திற்கு மாற்று என்பது எதுவுமே கிடையாது. அந்த பொது வாக்கெடுப்புக்கு முன்பு தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள படைகள் வெளியேற்றப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் ஈழம் மலரும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு வைக்கோ கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பான் கீ மூன் மற்றும் அதிகாரிகளின் உருவ படங்கள் அடங்கிய பதாகைகளை செருப்பால் அடித்து, தீயிட்டு கொளுத்தினார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஐ.நா. கொடியையும் எரித்தார்கள்.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றுவதற்காக அழைத்து சென்றனர். அதற்குள் சுமார் 50–க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரின் தடுப்பு வளையத்தை தாண்டி ஐ.நா.மன்ற அலுவலகத்தை நோக்கி பாய்ந்து சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் மீண்டும் ஒரு தடுப்பு வளையம் அமைத்து அலுவகத்திற்கு அருகில் செல்ல விடாமல் தடுத்து கைது செய்தனர்.
போராட்டத்தில் சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக பழநெடுமாறன், வைகோ தலைமையில் தலைவர்கள் போலீஸ் வாகனத்தில் ஐ.நா. அலுவலகத்திற்கு சென்று ஈழத் தமிழர்கள் படுகொலை குறித்தும், தமிழ் ஈழம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஐ.நா. அலுவலகத்தில் கொடுத்தனர்.