புதுச்சேரி மாநிலம், காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.எம்.ஜி.நகர், என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். தனியார் மேல்நிலைப்பள்ளியில் ‘செக்யூரிட்டி’யாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் வினோதினி பி.டெக் முடித்து விட்டு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சாப்ட்வேர் என்ஜினீயராக’ வேலை பார்த்து வந்தார்.
காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடியை சேர்ந்தவர் அப்பு என்கிற சுரேஷ் கட்டிட தொழிலாளி. வினோதினியின் தந்தை ஜெயபாலனின் நண்பர்.
அடிக்கடி ஜெயபாலனின் வீட்டுக்கு சுரேஷ் வந்ததால் அவருக்கும், வினோதினிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நம் தந்தையின் நண்பர்தானே என்று வினோதினி வித்தியாசம் பார்க்காமல் அவருடன் சகஜமாக பழகினார்.
இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட சுரேஷ், வினோதினி மீது ஆசைப்பட்டார். அவரை காதலித்து வந்தார். இந்த காதல் மற்றும் ஆசையை மனதில் வைத்துக் கொண்டு, நண்பர் ஜெயபாலனின் குடும்பத்துக்கு பண உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் செய்தார்.
ஆனால், அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. இருந்தாலும், சென்னையில் வேலை பார்த்து வந்த வினோதினி மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்த போதெல்லாம், சுரேஷ் அவரை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனாலும் வினோதினி அவரது காதலை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அப்படியும் அவரை விட்டு விலகாத சுரேஷ், வினோதினியை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கூறி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். ஆனால், அவர்களும் மறுத்து விட்டனர். இதனால், வினோதினி மீதும், அவரது பெற்றோர் மீதும் சுரேஷ் ஆத்திரம் கொண்டார்.
இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த நவம்பர் மாதம் வினோதினி காரைக்காலுக்கு சென்றிருந்தார். தீபாவளியை கொண்டாடி விட்டு, நவம்பர் 14–ந் தேதி இரவு 10.45 மணிக்கு, காரைக்காலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
வினோதினியை அவரது தந்தை ஜெயபால், குடும்ப நண்பர் பத்மநாபன் ஆகியோர் அழைத்துக் கொண்டு, காரைக்கால் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழி மறித்த சுரேஷ், வினோதினியைப் பார்த்து, ‘‘எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது’’ என்று கூறி, வினோதினியின் மீது ‘ஆசிட்’ ஊற்றி விட்டு ஓடி விட்டார்.
இந்த கோர சம்பவத்தில், வினோதினியின் முகம், கழுத்து, கை, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதி முழுவதும் வெந்து கருகியது. அவரது தந்தைக்கும், குடும்ப நண்பர் பத்மநாபனுக்கும் காயங்கள் ஏற்பட்டன.
‘ஆசிட்’ பட்ட வேதனையால் துடித்த வினோதினியை காரைக்காலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, வினோதினியின் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்தன.
இந்த நிலையில், வினோதினியின் சிகிச்சைக்கு பணமின்றி தவித்த அவரது பெற்றோருக்கு, அரசு துறையிலிருந்தும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் பண உதவிகள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து, வினோதினி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கிருந்து அவர் கடந்த மாதம் (ஜனவரி) 28–ந் தேதி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மீண்டும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு கடந்த 8, 9–ந் தேதிகளில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் 10–ந் தேதி மாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3 மாதங்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வந்தார். 12.02.2013 காலையில் அவர் திடீர் என்று மரணம் அடைந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘வினோதினிக்கு நுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது. எங்களால் முடிந்த அளவு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்’’ என்று கூறினார்கள்.
வினோதினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்பத்திரியில் வினோதினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
வினோதினியின் மரணத்தால் அவரது தந்தை ஜெயபாலன் ஆவேசத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவர் கூறியதாவது:– எனது மகள் உயிருடன் மீண்டு வருவாள் என்று நம்பியிருந்தோம். ஆனால் அவள் எங்களை தனியாக தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாள். அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவளது உயிருக்கு பாதிப்பு இல்லை என்றும் டாக்டர்கள் கூறி வந்தார்கள். ஆனால், திடீரென இன்று காலையில் அவள் உயிர் இழந்து விட்டாள் என்று டாக்டர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
வினோதினி எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பாதவள். அவளுக்குப் போய் இந்த நிலை ஏற்பட்டு விட்டதே! அவள் பார்வை இழந்திருந்தாலும், மருத்துவமனையில் உள்ள நர்சுகளின் குரலை வைத்து, அனைவரிடமும் அழகாக பேசுவாள். நாங்கள் 24 மணி நேரமும் அவளுடனேயே இருந்து வந்தோம். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறி எங்களை கடந்த 2 நாட்களாக எங்கள் மகளிடம் பேசுவதற்கு கூட டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.
எனது மகள் படுக்கையில் இருந்த போது, மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக கேட்டாள். ஆனால் அவள் ஆசைப்பட்ட சாப்பாட்டை எங்களால் கொடுக்க முடியவில்லை. அவள் படுக்கையில் இருக்கும் போது, ‘‘அப்பா, எனக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. இனி நான் உயிருடன் மீண்டு வந்தாலும் என்னால் உங்களை எல்லாம் பார்க்க முடியாதே’’ என்று ஏங்கினாள்.
மேலும், ‘‘என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவனை சும்மா விடாதீர்கள். நான் எவ்வளவு துடித்தேனோ, அந்த அளவுக்கு என் மீது ஆசிட் வீசிய கொடூரனும் துடிக்க வேண்டும். தூக்கில் போட்டால் கூட உடனே உயிர் போய் விடும். அவன் முகத்திலும் ஆசிட் வீச வேண்டும். அப்போதுதான் அந்த வேதனை அவனுக்கு புரியும். அவனைப்போல், உள்ள மற்றவர்களுக்கும் புரியும்’’ என்றும் கூறினாள். அதை நிறைவேற்றும் பொறுப்பு போலீசாரிடம் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வினோதினியின் தாய் மாமா ரமேஷ் கூறியதாவது:–
நாங்கள் எங்கள் பிள்ளையை மிகவும் செல்லமாக பார்த்து வந்தோம். 24 மணி நேரமும் அவளுடனேயே இருந்து வந்தோம். ஆனால் கடந்த 2 நாட்களாக அவளிடம் எங்களால் பேச முடியவில்லை. நான் தினமும் அவளுக்கு கஞ்சி கொண்டு வந்து கொடுப்பேன். அவள் இனிமையாக பேசுவதை கேட்டு நாங்கள் ஆறுதல் அடைவோம்.
அவள் மிகவும் நன்றாக இருந்தாள். அவளுடைய புண்கள் அனைத்தும் குணமாகி விட்டன. அவள் மீண்டு வருவாள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் டாக்டர்களின் அலட்சிய போக்கினால் அவள் இறந்துவிட்டாள்.
டாக்டர்களும், நர்சுகளும் அக்கறையோடு பார்த்திருந்தால் அவளை காப்பாற்றி இருக்கலாம். எனினும் நாங்கள் யார் மீதும் புகார் செய்யப் போவதில்லை. நாங்கள் பண நெருக்கடியில் தவித்த போது, எங்களுக்கு உதவி புரிந்த அரசியல் தலைவர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்கள் நன்றியை கூறிக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வினோதினி மரணம் அடைந்த செய்தி அறிந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அரசியல் பிரமுகர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் வந்து குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வினோதினியின் மீது ஆசிட் வீசிய கட்டிடத்தொழிலாளி சுரேஷ் மீது காரைக்கால் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வினோதினி பரிதாபமாக உயிர் இழந்ததைத் தொடர்ந்து, சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.