உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 2.44 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார்.
அவர் அறிவித்தபடி, காவிரியில் தண்ணீர் திறந்து 4 நாட்கள் ஆகியும், காவிரி நீர் இன்னும் தமிழக எல்லையை அடையவில்லை. தற்போது, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு வெறும் 127 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட 5 பேர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, 2.44 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்கவில்லை. வேண்டுமென்றே தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாக பொய் கூறுகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதாக கர்நாடகா கூறுவதில் உண்மையில்லை. தற்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அடிப்படையில், மேட்டூர் அணைக்கு 2.44 டிஎம்சி தண்ணீர் வந்து சேர சுமார் 240 நாட்கள் ஆகும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.