மேற்குவங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள மார்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூர்யா சென் மார்க்கெட்டில் இன்று காலை 3.30 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் மிகவும் குறுகிய நிலையில் இருந்ததால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடினர். கட்டிடத்தின் ஒரு பகுதியில் மட்டுமே வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தீ விபத்தில் சிக்கி கொண்டவர்கள் வெளியே வரமுடியாமல் புகை மூட்டத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இதனை அடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அம்மாநில தீயணைப்பு துறை அமைச்சர் ஜாவித் கான் இடதுசாரி கட்சிகளை தாக்கி பேசியுள்ளனர். சம்பவம்
நடைபெற்ற கட்டிடத்திற்கான ஒப்பந்தம் இடதுசாரிகள் ஆட்சியின் போது போடப்பட்டு செயல்முறை படுத்தப்பட்டது. இங்கு வந்து தீயணைப்பு பணியை பார்த்த நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இங்கு தீ விபத்தில் இருந்து பாதுகாக்க எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று கூறினார்.