விவேகானந்தர் 150-வது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
சுயநலம் இல்லாத இடத்தில் தான் தியாக மனப்பான்மை இருக்கும். தியாக மனப்பான்மை இருந்தால் தான் மக்களுக்கு தொண்டாற்ற முடியும். இந்தத் தருணத்தில், சுவாமி விவேகானந்தரின் இளமைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இளமைப் பருவத்தில் நரேந்திரனாக இருக்கும் போதே, துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சுவாமி விவேகானந்தரிடம் இருந்தது. தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், தனது தாயாரிடம், தனது துறவு விருப்பத்தை தெரிவிப்பார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு முறை தன் தாயாரிடம் துறவறம் மேற்கொள்ள விவேகானந்தர் அனுமதி கேட்டபோது, “சமையலறைக்குப் போய் அங்கிருந்து கத்தியை எடுத்து வா” என்றார் அவரது அன்னை. விவேகானந்தரும் கத்தியைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே, “கொஞ்ச நாட்கள் கழியட்டும். பின்பு நீ துறவறம் மேற்கொள்ளலாம்“” என்று தெரிவித்தார் விவேகானந்தரின் அன்னை. எப்போதெல்லாம் தன்னுடைய துறவு விருப்பத்தை சுவாமி விவேகானந்தர் தன் தாயிடம் தெரிவித்தாலும், இதையே தான் அவருடைய தாயார் சொல்லி வந்தார். துறவுக்கும், கத்திக்கும் என்ன தொடர்பு என்று விவேகானந்தருக்கு புரியவில்லை.
ஒரு முறை இவ்வாறு சுவாமி விவேகானந்தர் கத்தியைக் கொண்டு வந்து கொடுத்ததும், “இனி நீ துறவு மேற்கொள்ளலாம்“” என்று கூறினார் சுவாமி விவேகானந்தரின் அன்னை.
உடனே சுவாமி விவேகானந்தர், “கத்திக்கும், துறவுக்கும் உள்ள தொடர்பு என்ன?” என்று தன் அன்னையிடம் வினவினார்.
விவேகானந்தரின் அன்னை “முன்பு ஒவ்வொரு முறை நான் கத்தியைக் கொண்டு வா என்று சொன்ன போதும், பாதுகாப்பான கைப்பிடியை நீ பிடித்துக் கொண்டு, ஆபத்தான கூர்மைப் பகுதியை என் பக்கம் நீட்டுவாய். ஆபத்து பிறருக்கு, பாதுகாப்பு உனக்கு என்கிற சுயநல உணர்ச்சியின் வெளிப்பாடு அது.
ஆனால் இப்போது ஆபத்தான கூர்மைப் பகுதியை நீ பிடித்துக் கொண்டு, பாதுகாப்பான கைப்பிடியை என் பக்கம் நீட்டினாய். அதாவது, பிறரை பாதுகாக்க வேண்டும் என்ற தியாக உணர்வு உன்னிடம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான், துறவறம் மேற்கொள்ள நான் சம்மதித்தேன்” என்று கூறினார்.
இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தியாக மனப்பான்மையே துறவின் அடிப்படை, அஸ்திவாரம் என்பதாகும். தியாக மனப்பான்மை இருந்தால் தான் பிறருக்கு தொண்டாற்ற முடியும்; மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.